Home கனடா செய்திகள் கனடாவில் சூரியனைத் தேடிய பயணம் பகலில் சில செக்கன்கள் சூழ்ந்த இருள்

கனடாவில் சூரியனைத் தேடிய பயணம் பகலில் சில செக்கன்கள் சூழ்ந்த இருள்

by admin

கனடா நாட்டிலே பனிக்காலத்தில் சூரியனைக் காண்பது என்பது அரிதாகவே இருக்கும். வெளியே வெய்யில் எறிப்பது போல இருந்தாலும், வெளியே சென்றால் சில சமயம் கடும் குளிராகவும் இருக்கும். காலநிலை காரணமாக இம்முறை கனடாவில் பனி கொட்டுவது மிகக் குறைவாகவே இருந்தது. வழமைபோல ஆய்வாளர்கள் பல காரணங்கள் சொன்னாலும், இந்த மாற்றத்திற்கு எல்நினோ (El Nino) என்ற பசுபிக்சமுத்திர நீரோட்டமும் இம்முறை ஒரு காரணமாக இருந்தது. சில வருடங்களுக்கு ஒரு முறை டிசெம்பர் மாதத்தில் எல்நினோவின் இதுபோன்ற பாதிப்பை எங்களால் இங்கே அவதானிக்க முடிகிறது.

ஏப்ரல் 8 ஆம் திகதி சூரிய கிரகணம் நடக்கப் போவதாகவும், வட அமெரிக்காவில் அதை முழுமையாகப் பார்க்க முடியும் என்றும் ஊடகங்கள் பல செய்திகளை வெளியிட்டிருந்தன. சூரிய கிரகணம் என்பது எப்போதாவது நடக்கும் ஒரு சிறப்பு வானியல் நிகழ்வாக இருக்கின்றது. சில சமயங்களில் சந்திரன், பூமி, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது இத்தகைய நிலை ஏற்படுகின்றது. முக்கிமாக சூரியன் மற்றும் பூமிக்கு இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும்போது சூரிய கிரகணமும், இவற்றுக்கு நடுவே ஒரே நேர்க் கோட்டில் பூமி வரும்போது சந்திர கிரகணமும் ஏற்படுகிறது.

அனேகமான கனடியர்கள் போலவே நாங்களும் இதற்கான ஆயத்தங்களைச் செய்திருந்தோம். சூரியனைப் பார்ப்பதற்கான விசேட கண்ணாடி, நிகழ்வைப் படம் பிடிப்பதற்கான கமெரா எல்லாம் தயாராக வைத்திருந்தோம். நாயாகரா நீர்வீழ்ச்சிப் பகுதிதான் இதற்குச் சிறந்த இடம் என்று ஊடகங்கள் தெரிவித்திருந்தன. பிள்ளைகளும் எங்களுடன் வந்ததால், நாங்களும் அங்குதான் போவதாக இருந்தோம். அதே நேரம் கூட்டத்தைச் சமாளிக்க அனேகமான வீதிகளின் போக்குவரத்தைத் தற்காலிகமாக மூடப்போவதாக நயாகரா பொலீஸார் அறிவித்திருந்தார்கள்.

பிள்ளைகள் பாடசாலையால் திரும்பி வீட்டுக்குப் போகும் நேரம்தான் இங்கே கிரகணம் என்பதால், அவர்கள் அதற்கான கண்ணாடி இல்லாமல் நேரடியாகப் பார்த்து விடுவார்கள் என்ற பயம் காரணமாக முன் எச்சரிக்கையோடு அன்று பாடசாலைகள் முடப்பட்டிருந்தன.

எதிர்பாராத விதமாக அன்று ரொறன்ரோ கருமேகத்தால் மூடப்பட்டிருந்தது. நயாகரா நீர்வீழ்ச்சிப் பகுதியிலும் முகிற் கூட்டங்கள் நிறைந்திருப்பதாகவும், தெளிவாகப் பார்க்க முடியாமல் போகலாம் என்ற செய்தியும் வந்தது. எனவே நாங்கள் பயணத்தின் திசையை மாற்றியிருந்தோம். தெற்கு நோக்கிப் போகாமல் மேற்கு நோக்கிக் ஹமில்டன் பகுதிக்குச் சென்றோம். அங்கே வானம் தெளிவாக இருந்தது, ஆனால் ஒரு நிமிடமும் 50 விநாடிகளும்தான் இதைப் பார்க்க முடியம் என்பது தெரிய வந்தது. எனவே அங்கிருந்து இன்னும் சற்று தெற்கே உள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றோம், அங்கே வீதி ஓரங்களில் வண்டிகளை விட்டுவிட்டு மக்கள் கண்ணாடிகளோடும், கமெராக்களோடும் நிறைந்திருந்தார்கள். அங்கு வானம் இன்னும் தெளிவாக இருந்ததால், சுமார் இரண்டு நிமிடங்கள் வரை முழுக்கிரகணத்தையும் எங்களால் பார்க்கக்கூடியதாக இருந்தது.

சுமார் 3:15 மணியளவில் சந்திரன் சூரியனை மறைக்கத் தொடங்கியது. முழுக்கிரகணம் வந்தபோது தெற்கே வானம் அரேஞ்ச் நிறமாக மாறியிருந்தது. தெரு விளக்குகள் சட்டென்று எரியத் தொடங்கின. காரணம் இருட்டினால் தானியங்கியாகவே எரியக்கூடிய தெருவிளக்குள் என்பதுதான் காரணம். திகைப்படைந்த பறவைகள் எல்லாம் கூடு நோக்கிப் பறக்கத் தொடங்கியிருந்தன. எல்லோரும் கண்ணாடியை எடுத்துவிட்டு, வெள்ளி மோதிரம் போலத் தெரிந்த சூரியனை நேரடியாகவே பார்த்தார்கள். எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது, எங்கள் வாழ்நாளில் பூமியில் இருந்து சூரியனை வெறுங்கண்ணால் நேரடியாகப் பார்க்கலாம் என்று நினைத்தும் பார்த்திருக்க மாட்டோம். அப்படி ஒரு சந்தர்ப்பம் எங்களுக்குக் கிடைத்தது.

வண்டியில் போகும் போது இதைப் பற்றி உரையாடிக் கொண்டு சென்றோம். அப்போது ஆறு வயதுடைய ஒரு பிள்ளை ‘சந்திரன் இரவில்தானே வரும், இன்று மட்டும் என் பகலில் வருகின்றது’ என்று கேட்டது. அறிவியல் சார்ந்த கேள்வி என்பதால், ‘சந்திரன் பகலிலும் வருகிறது, ஆனால் பகலில் சூரிய வெளிச்சத்தால் அது மறைக்கப்பட்டு விடுகின்றது’ என்று விளக்கம் கொடுத்தேன்.

1972 ஆம் ஆண்டு இதேபோல கிரகணம் நடந்தது, இனி 80 வருடங்களின்பின், அதாவது 2106 ஆம் ஆண்டுதான் இதே போன்ற முழுகிரகணத்தைப் பார்க்க முடியும். ஒரே ஒரு குறை என்னவென்றால், அடுத்த தலைமுறைக்குத்தான் இதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் கிடைக்கப் போகிறது. அடுத்த தலைமுறையினர் இந்தப் பேப்பர் கட்டிங்கைக் கவனமாகப் பாதுகாத்தால், ஒரு காலத்தில் ‘என்னுடைய பூட்டன் முழுக்கிரகணத்தையும் நேரடியாகப் பார்த்திருக்கிறார்’ என்றாவது அவர்கள் பெருமையுடன் பீற்றிக் கொள்ளலாம்.

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy