Home இந்தியா செய்திகள் நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

by admin

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நயினார் நாகேந்திரன் ஓட்டலில் வேலை பார்த்த சதீஷ், பெருமாள் உள்பட 3 பேரை கைது செய்து தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 3 பேரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் நயினார் நாகேந்திரன், ஆசைதம்பி, சென்னை அபிராமிபுரத்தை சேர்ந்த பா.ஜனதா மாநில தொழில் துறை பிரிவின் தலைவர் கோவர்தனன், பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஜெய்சங்கர், நவீன், பெருமாள் உள்ளிட்டோர் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது. வழக்கு விசாரணைக்கு 22-தேதி நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் ஆகியோர் தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன், இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் ஆஜரானார்கள்.

அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 2-வது சம்மன் அனுப்ப ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்தநிலையில், ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் 2-வது முறையாக சம்மன் வழங்கினர். ஏற்கனவே அனுப்பிய சம்மனுக்கு ஆஜாராக நிலையில் 2-வது முறையாக நேரடியாக சம்மன் வழங்கப்பட்டது.

சம்மன் குறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது என்னுடைய பணம் அல்ல என பலமுறை கூறிவிட்டேன். ரூ.4 கோடி பறிமுதலான விவகாரத்தில் மே 2-ம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராவேன்.என்னை முழுவதுமாக குறிவைத்துள்ளனர். அரசியல் சூழ்ச்சியாகவே இதைப்பார்க்கிறேன். போலீசார் தங்கள் கடமையை செய்கின்றனர். நான் முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்றார்.

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy