Home இலங்கை செய்திகள் மன்னாரில் தேசிய பாடசாலைகளில் தொடரும் ஆசிரியர் பற்றாக்குறை – உயர்தர கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

மன்னாரில் தேசிய பாடசாலைகளில் தொடரும் ஆசிரியர் பற்றாக்குறை – உயர்தர கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

by admin

 

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக தேசிய பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்ற நிலையில் உயர்தர பாடங்கள் கற்பிக்க ஆசிரியர்கள் இன்மையால் உயர்தர கல்வி நடவடிக்கை பாதிப்படைந்துள்ளதாக மன்/புனித சவேரியார் ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரி அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு தேசிய பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்து தருமாறு கோரி 06-05-2024 அன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த பாடசாலை அதிபர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

குறிப்பாக நீண்டகாலமாக நிலவும் ஆசிரியர் வெற்றிடம் காரணமாக உயர்கல்வி பிரிவுகளை நடத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் சில கற்கைகளுக்கான முழுமையான ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக பாட நெறியை நிறுத்த வேண்டிய நிலையும் காணப்படுவதாகவும் குறித்த மகஜரில் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் தளபாடங்கள் இல்லை எனவும் தற்காலிகமாக பலகைகளை இணைத்தே சில வகுப்பினருக்கு கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மாணவர்களுக்கான கட்டிட தேவைகள் அதிகமாக காணப்படுவதாகவும் சில கட்டிடங்கள் அமைச்சுக்களின் நிதி ஒதுக்கப்பட்டு பகுதி அளவில் மாத்திரம் கட்டப்பட்டு அரைகுறை நிலையில் காணப்படுவதாகவும், இதனால் பாடசாலை நிர்வாகம் பல சவால்களை எதிர்கொள்வதாக வும் தெரிவித்து குறித்த விடயங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிபர் இணைந்து தீர்வை பெற்றுத் தர கோரி குறித்த மகஜரை கையளித்துள்ளனர்.

வடமாகாணத்தில் நிர்வாக ரீதியாக காணப்படுகின்ற குறைபாடுகள்,இட மாற்றங்களில் காணப்படும் குறைபாடுகள்,கல்வி நிர்வாக நடவடிக்கையில் காணப்படும் அரசியல் தலையீடுகள் மற்றும் மத்திய அமைச்சின் கீழ் காணப்படும் பாடசாலைகள் மற்றும் மாகாண சபையின் கீழ் காணப்படும் பாடசாலைகள் என காணப்படும் பாகுபாட்டால் பல பாடசாலைகளில் இவ்வாறான ஆசிரியர் பற்றாக்குறை,தளபாட பிரச்சனை,கட்டி தேவைகள் என்பவற்றை தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy