Home இந்தியா செய்திகள் கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல் அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்த உத்தரவு

கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல் அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்த உத்தரவு

by admin

கேரளாவில் மேற்கு நைல் காய்ச்சல் (வெஸ்ட் நைல் காய்ச்சல்) பரவத் தொடங்கியிருக்கிறது. திருச்சூர், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு நைல் காய்ச்சல் பாதிப்பு இருப்பதை மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார். அத்துடன், அனைத்து மாவட்டங்களிலும் உஷாராக இருக்கும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கியூலெக்ஸ் வகை கொசுக்களால் பரவும் மேற்கு நைல் வைரஸ் காய்ச்சலுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அவர் தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது

மேற்கு நைல் வைரஸ் காய்ச்சல் பரவுவது குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை. காய்ச்சல் அறிகுறிகள் அல்லது மேற்கு நைல் நோய்த்தொற்றின் பிற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறவேண்டும். மேற்கு நைல் நோய்த்தொற்றின் முக்கிய அறிகுறிகள் தலைவலி, காய்ச்சல், தசைவலி, தலைச்சுற்றல் மற்றும் நினைவாற்றல் இழப்பு ஆகும். ஆனால் பெரும்பாலான நோயாளிகளுக்கு அறிகுறிகள் இருப்பதில்லை.

இந்த காய்ச்சல் ஏற்பட்டவர்களில் ஒரு சதவீதம் பேருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, அதன்விளைவாக சுயநினைவு இல்லாமல் போகும். சில நேரங்களில் மரணம் ஏற்படலாம். ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற அறிகுறிகளை காட்டினாலும், அதனுடன் ஒப்பிடும்போது இறப்பு விகிதம் ஒப்பீட்டளவில் குறைவு.

நோய் தடுப்பு நடவடிக்கையாக, பருவமழைக்கு முந்தைய துப்புரவுப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கு நைல் வைரசுக்கு எதிராக மருந்து அல்லது தடுப்பூசி எதுவும் இல்லாததால், அறிகுறியை வைத்து அடையாளம் கண்டு சிகிச்சை அளிப்பது மற்றும் தடுப்பு நடவடிக்கை முக்கியமானது.

கொசுக்கடியில் இருந்து தப்பிக்க, உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணியவேண்டும். கொசுவலை மற்றும் கொசு விரட்டிகளை பயன்படுத்த வேண்டும். வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேற்கு நைல் காய்ச்சல் முதன்முதலில் 1937-ல் உகாண்டாவில் கண்டறியப்பட்டது. கேரளாவில் 2011-ல் கண்டறியப்பட்டது. கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் 2019-ல் இந்த காய்ச்சல் பாதிப்பினால் உயிரிழந்தான். அதன்பிறகு, மே 2022-ல், திருச்சூர் மாவட்டத்தில் 47 வயது நபர் மரணம் அடைந்தார்.

 

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy