சர்வதேச எரிசக்தி விலைகள் தற்போதைய மட்டத்தில் நிலையாகத் தொடருமானால், பிரித்தானியாவில் பணவீக்கம் முன்னர் கணிக்கப்பட்ட அளவை விடக் குறைவாக இருக்கக்கூடும் என இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய வாரங்களில் சர்வதேச எரிசக்தி விலைகள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்த மாற்றம் பிரித்தானியாவின் பணவீக்கக் கணிப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 5ஆம் திகதி வெளியிடப்பட்ட கணிப்பின்படி, அடுத்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் பிரித்தானியாவின் பணவீக்கம் சுமார் 5 சதவீதத்தை எட்டும் என இங்கிலாந்து வங்கி எதிர்பார்த்திருந்தது.
இதன்போது, மூன்று ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதிக்குப் பின்னர் முதல் முறையாக வட்டி விகிதத்தையும் அதிகரித்திருந்தது.
எனினும், இந்த மாதம் பிரெண்ட் மசகு எண்ணெயின் விலை சுமார் 20 சதவீதத்தாலும், பிரித்தானிய இயற்கை எரிவாயு எதிர்கால ஒப்பந்தங்களின் விலை 15 சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளன.
ஆயினும், மத்திய கிழக்கில் பெப்ரவரி மாத இறுதியில் போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் நிலவிய விலைகளுடன் ஒப்பிடுகையில், எரிசக்தி விலைகள் இன்னமும் அதிகமாகவே உள்ளன.
இது தொடர்பாக நாடாளுமன்ற திறைசேரிக் குழுவின் முன்னிலையில் கருத்துத் தெரிவித்த ஆண்ட்ரூ பெய்லி, தற்போதைய எரிசக்தி விலைகள் தொடர்ந்து நிலைத்திருந்தால் பணவீக்கத்தின் உச்ச அளவு குறைவாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரித்தானியப் பொருளாதாரம் அண்மைக்காலமாக எதிர்பார்த்ததை விட அதிக மீட்சியைக் காட்டியுள்ளதாகவும், தொழிலாளர் சந்தையின் சரிவு நிலைமை தணிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றங்களையும் எதிர்கால பணவீக்கக் கணிப்புகளில் உள்வாங்க வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, எதிர்காலத்தில் வட்டி விகிதங்கள் மேலும் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நிதிச் சந்தை மதிப்பீடுகளின்படி, அடுத்த மாதம் இங்கிலாந்து வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை அதிகரிப்பதற்கு 80 சதவீத வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 2027ஆம் ஆண்டில் இரண்டு தடவைகள் தலா 0.25 சதவீத புள்ளிகளால் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்பங்களின் எரிசக்திக் கட்டணங்கள் 26 சதவீதம் அதிகரிப்பு!
இதற்கிடையில், பிரித்தானியாவின் எரிசக்தி ஒழுங்குமுறை அமைப்பான Ofgem, புதன்கிழமை குடும்பங்களுக்கான எரிசக்திக் கட்டண உச்சவரம்பை 26 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத உயர்ந்த மட்டத்தை எரிசக்திக் கட்டணங்கள் எட்டியுள்ளன.
இந்த அதிகரிப்பு அடுத்த ஆண்டு பிரித்தானியாவின் பணவீக்க அழுத்தத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என இங்கிலாந்து வங்கி எதிர்பார்க்கிறது.
வட்டி விகிதங்களை விரைவாக அதிகரிக்க வேண்டும் – கேத்தரின் மான்
இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் துணை அதிகாரி கிளேர் லொம்பார்டெல்லி, அடுத்த ஆண்டு உணவுப் பொருட்களின் விலைப் பணவீக்கம் சுமார் 5 சதவீதத்தை எட்டக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அண்மைய சம்பள அதிகரிப்புத் தரவுகள் கலவையான நிலையை வெளிப்படுத்துவதாகவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எதிர்பார்த்த பாதையில் தொடர்கின்றனவா என்பதில் தமக்கு நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வட்டி விகிதங்களை மேலும் விரைவாகவும் அதிகமாகவும் உயர்த்த வேண்டும் என இங்கிலாந்து வங்கியின் நாணயக் கொள்கைக் குழு உறுப்பினர் கேத்தரின் மான் வலியுறுத்தியுள்ளார்.
நிறுவனங்களின் இலாப வரம்பைக் குறைப்பதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும்


