Thursday, November 26, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்18 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

18 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

இலங்கையின் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (26) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது சில இடங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனுராதபுரம், பதுளை, காலி, மன்னார், மாத்தறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் பிராந்தியங்களுக்கும் எச்சரிக்கை!

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்படக்கூடிய பாதிப்புகள்

மரங்கள் முறிந்து விழுதல், வீடுகளுக்கு சேதம் ஏற்படுதல், திடீர் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளில் தடை, விவசாயப் பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கு சேதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

மேலும், வீதி, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துகளும் பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்

  • இடியுடன் கூடிய மழை நெருங்கும் போது வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்.

  • பாதுகாப்பான கட்டடங்கள் அல்லது மூடப்பட்ட வாகனங்களுக்குள் தஞ்சமடைய வேண்டும்.

  • மரங்களின் கீழும் திறந்தவெளி கட்டமைப்புகளின் கீழும் தஞ்சமடைவதைத் தவிர்க்க வேண்டும்.

  • திறந்தவெளிகள், கடற்கரைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

  • மின்சாதனங்களைப் பயன்படுத்துவதையும் வெள்ளநீர் சூழ்ந்த வீதிகளில் பயணிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

  • வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.

அதேவேளை, மீனவர்கள் மற்றும் சிறிய படகுகளைப் பயன்படுத்துவோர் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், ஏற்கனவே கடலில் இருப்பவர்கள் விரைவாக கரைக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments