யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுகளில், தமிழ் மொழி மூலம் தொடர்பாடக்கூடிய அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நீதியை நாடிச் செல்லும் பெண்கள் மற்றும் யுவதிகள், மொழிப் பிரச்சினை காரணமாகத் தமது பிரச்சினைகளைப் பொலிஸ் நிலையங்களுக்குக் கொண்டு செல்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், அவர்களுக்குத் தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் ஏற்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், யாழ்ப்பாண மாவட்ட அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், மகளிர் அபிவிருத்தி நிலையங்கள், தற்காலிகப் பாதுகாப்பு இல்லங்கள், சிறுவர் இல்லங்கள் மற்றும் நன்னடத்தை நிலையங்களின் செயற்பாடுகளுக்கு அடுத்த வருடம் மேலதிக கவனம் செலுத்தப்படும் என்றார்.
குறிப்பாக, ஆளணிப் பற்றாக்குறை நிலவும் நிலையங்களின் தேவைகள் குறித்தும் ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், தனித் தலைமைத்துவம் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களைப் பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதும் அடுத்த ஆண்டுக்கான முக்கிய இலக்குகளில் ஒன்றாகும் எனத் தெரிவித்தார்.
இதற்காகப் பெண்கள் மற்றும் இளம் யுவதிகளுக்குக் கடன் மற்றும் நிதியுதவிகளை வழங்குதல், தொழில்முனைவோர் பயிற்சிகளை அளித்தல், அவர்களைச் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும், இதன் மூலம் பிரதேச அபிவிருத்தியை ஊக்குவிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


