மாவீரர் நினைவேந்தல்களை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்த வேண்டாம் என்றும், வடக்கு – கிழக்கு மக்களே சுயமாக நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை 27 மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகக் குறிப்பிட்டார்.
மாவீரர் நினைவேந்தல்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே அனுமதி வழங்கியதாக முன்வைக்கப்படும் கருத்தை ஏற்க முடியாது எனத் தெரிவித்த அவர், கடந்த நல்லாட்சி அரசாங்கம் மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சிக் காலங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டினார்.
அரசாங்கங்கள் நினைவேந்தல்களுக்கு தடைகளை ஏற்படுத்திய காலங்களில் அதற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளதாகவும், இம்முறை மக்கள் தாமாகவே நினைவேந்தல்களை முன்னெடுத்துள்ள நிலையில், அதனை அரசியல் இலாபத்திற்காக உரிமை கோருவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்தார்.
கார்த்திகைப் பூவை வைத்து மாவீரர்களை நினைவுகூருவதற்குக் கூட பொலிஸார் தடைகளை ஏற்படுத்துவதாகக் குற்றம்சாட்டிய சாணக்கியன், இவ்வாறான நடவடிக்கைகள் மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், ஆயுதப் போராட்டம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள் மற்றும் சம அந்தஸ்து இன்னும் வழங்கப்படவில்லை என்றும், மாகாண சபைத் தேர்தலை நடத்தி உரிய அதிகாரங்களை வழங்குவதற்கும் அரசாங்கம் தயாராக இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயா, கீழ் மல்வத்து ஓயா மற்றும் மாதுறு ஓயா திட்டங்கள் தமிழ் – முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதிக்கக்கூடும் எனத் தெரிவித்த அவர், மேய்ச்சல் தரைப் பிரச்சினை, கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.


