Friday, November 27, 2026
spot_img
Homeஉலக செய்திகள்குடும்பத்தை அச்சுறுத்தினால் துப்பாக்கியால் சுடுவேன்! –டக் ஃபோர்ட்

குடும்பத்தை அச்சுறுத்தினால் துப்பாக்கியால் சுடுவேன்! –டக் ஃபோர்ட்

யாராவது தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து குடும்பத்தினரை அச்சுறுத்தினால், ஒரு நொடியும் தயங்காமல் தனது துப்பாக்கியைப் பயன்படுத்துவேன் என கனடாவின் ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டொரொன்டோ நகரில் அண்மையில் இடம்பெற்ற கொடூரமான வீடு புகுந்து கொள்ளையிடும் சம்பவம் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, குயின்ஸ் பார்க்கில் ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நான் சட்டப்பூர்வமாகத் துப்பாக்கி வைத்திருப்பவன். யாராவது துப்பாக்கியுடன் என் வீட்டிற்குள் புகுந்து என் குடும்பத்தைச் சுடத் தயாரானால், ஒரு நொடியும் தாமதிக்காமல் அதைப் பயன்படுத்துவேன். முன்வாசல் வழியாகவே அவனைச் சுட்டு வீழ்த்துவேன் என டக் ஃபோர்ட் ஆவேசமாகத் தெரிவித்தார்.

மேலும், வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்தால் கத்தி, பேஸ்பால் மட்டை எனக் கையில் கிடைக்கும் எதையும் பயன்படுத்தி மக்கள் தமது குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தான் கடந்த 40 ஆண்டுகளாகச் சட்டப்பூர்வமாக வேட்டைத் துப்பாக்கி வைத்திருப்பதாகவும், வீட்டில் துப்பாக்கியையும் தோட்டாக்களையும் தனித்தனி இடங்களில் பாதுகாப்பாகப் பூட்டி வைத்திருப்பதாகவும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் டொரொன்டோவின் ‘பொப்லர் பிளெய்ன்ஸ்’ வீதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 39 வயதான பிரபல இசைக்கலைஞர் மைக்கேல் எக்கர்ட் உயிரிழந்தார்.

இது டொரொன்டோவில் 2026 ஆம் ஆண்டில் பதிவான 37 ஆவது கொலையாகும். அத்துடன், இந்த ஆண்டில் மட்டும் டொரொன்டோவில் 111 வீடு புகுந்து கொள்ளையிடும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் கறுப்பு நிற ஹோண்டா கார் ஒன்றைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.

ஒரு மாதத்திற்குள் டொரொன்டோவில் நடந்துள்ள இரண்டாவது பாரிய சம்பவம் இதுவெனக் குறிப்பிட்ட மேயர் ஒலிவியா சௌ, மக்கள் தமது சொந்த வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பற்ற உணர்வுடனும் அச்சத்துடனும் வாழ்வது தனக்குக் கோபத்தையும் கவலையையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

டக் ஃபோர்ட்டின் கருத்து “பொறுப்பற்றது” என ஒன்ராறியோ புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் மாரிட் ஸ்டைல்ஸ் சாடியுள்ளார்.

மக்களை ஆயுதம் ஏந்துமாறு கூறுவதற்குப் பதிலாக, நீதிமன்றத் தேக்கநிலைகளைக் குறைத்து குற்றவாளிகளைத் தண்டிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments