பாடகர் மனோவின் மகன் ஷாகிர் கதாநாயகனாக நடித்துள்ள ‘சிட்டு குருவி’ திரைப்படம் காதல், அழகு மற்றும் வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
ஷாகிர் மனோவும் அவரது நண்பர் அர்ஜுனனும் இணைந்து விளம்பர நிறுவனம் ஒன்றைத் தொடங்குகின்றனர். தங்களது நிறுவனத்தின் மூலம் சோப்பு விளம்பரம் ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிடும் அவர்கள், அதில் நடிப்பதற்கு அழகான பெண்ணைத் தேடுகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் நடைபெறும் அழகிப் போட்டியில் வெற்றிபெற்று, அடுத்ததாக இந்திய அழகிப் போட்டியில் பட்டம் வெல்லும் இலட்சியத்துடன் பயணிக்கும் அர்ச்சனா சிங்கை ஷாகிர் சந்திக்கிறார்.
அவரைத் தங்களது விளம்பரத்தில் நடிக்க வைக்க முயற்சிக்கும் ஷாகிர், நாளடைவில் அவரது அழகில் மயங்கி காதல் கொள்கிறார்.
இதற்கிடையில், எதிர்பாராத விதமாக இடம்பெறும் விபத்தில் அர்ச்சனா சிங்கின் முகத்தில் பலத்த காயம் ஏற்படுகிறது. அழகைக் கண்டு காதல் கொண்ட ஷாகிர், இந்த விபத்துக்குப் பின்னரும் தனது காதலைத் தொடர்ந்தாரா? இருவரும் திருமண வாழ்க்கையில் இணைந்தார்களா? என்பதையே திரைப்படத்தின் மீதிக்கதை எடுத்துரைக்கிறது.
நடிகர்களின் நடிப்பு
பாடகர் மனோவின் மகன் ஷாகிர் கதாநாயகனாக நடித்துள்ளார். அர்ச்சனா சிங்கின் அழகில் மயங்கி காதல் கொள்ளும் காட்சிகளிலும், அவரை விளம்பரத்தில் நடிக்க வைப்பதற்காக முயற்சிக்கும் காட்சிகளிலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அர்ச்சனா சிங் தனது அழகான தோற்றத்தால் ரசிகர்களைக் கவர்கிறார். இரண்டாவது கதாநாயகனாக வரும் பி. ஸ்ரீமன், திவ்யா நாகேஷ், அர்ஜுன், தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன், இளவரசன் மற்றும் அஞ்சலி தேவி ஆகியோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நடித்துள்ளனர்.
எனினும், ஒரு சில கதாபாத்திரங்களின் நடிப்பில் நாடகத்தன்மை வெளிப்படுவது திரைப்படத்தின் பலவீனமாக அமைந்துள்ளது. அதேவேளை, ரிஷாவின் குத்தாட்டம் திரையில் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.
தொழில்நுட்பப் பங்களிப்பு
நல. இளந்திரையன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு எம்.ஜி. ராயின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு அழகு சேர்க்கிறது.
அழகை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட காதல், எதிர்பாராத விபத்துக்குப் பின்னரும் தொடருமா? உண்மையான காதலின் ஆழம் எத்தகையது? என்ற கேள்விகளை மையமாகக் கொண்டு இயக்குநர் ஏ.சி. சவுந்தர் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.


