நடிகர் விஜய் சேதுபதி, அரசியலில் ஈடுபடுவது குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது, அரசியல் என்பது பதவிக்கான ஆசையல்ல, மக்களுக்குச் செய்யும் சேவை எனத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘டிரெயின்’ திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முழுக் கதையும் ரயிலில் இடம்பெறுவதால், இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திரைப்படம் தொடர்பான நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட விஜய் சேதுபதியிடம், தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம், அவரது ஆட்சி குறித்த பார்வை மற்றும் தனக்கு அரசியலில் ஈடுபடும் விருப்பம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், விஜய்யுடன் இணைந்து பணியாற்றியுள்ளதாகவும், அரசியல் என்பது அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்களை உள்ளடக்கியது எனவும் குறிப்பிட்டார்.
மேலும், அரசியலுக்கு வருவது தனக்கு ஓர் ஆசையல்ல, அது ஒரு சேவை எனத் தெரிவித்த அவர், தாம் நடத்தும் அமைப்பின் ஊடாக இதுவரை இரண்டு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும், குளமொன்றைத் தூர்வாரியுள்ளதாகவும், பலரின் கல்விக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் கூறினார்.
தாம் ஈட்டும் வருமானத்தின் மூலம் இத்தகைய சமூகப் பணிகளை முன்னெடுப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், அரசியல் கருத்துகளைப் பேசுவதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனக் குறிப்பிட்ட விஜய் சேதுபதி, எந்தவொரு ஆட்சியாக இருந்தாலும் அதனை நாகரிகமான முறையில் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவசியம் எனத் தெரிவித்தார்.
மேலும், ஒரு விடயத்தைச் சரியாகக் கவனிக்காமல் அதுகுறித்துக் கருத்து வெளியிடுவது அரைகுறையான புரிதலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தாம் வெளியிடும் கருத்துகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள், தாம் நடித்த திரைப்படங்களைப் பாதிக்கக்கூடாது என்றும் விஜய் சேதுபதி வலியுறுத்தியுள்ளார்.


