Monday, November 23, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்ஆர்யாவின் 'ஹலோ காதல்' பட டிரெய்லர் நாளை வெளியீடு

ஆர்யாவின் ‘ஹலோ காதல்’ பட டிரெய்லர் நாளை வெளியீடு

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிகர் ஆர்யா முழுநீள ரொமான்டிக் காமெடி திரைப்படமொன்றில் நடித்துள்ள நிலையில், அவரது 40ஆவது திரைப்படமான ‘ஹலோ காதல்’ படத்தின் டிரெய்லர் நாளை (24) வெளியாகவுள்ளது.

தமிழில் ‘ஹலோ காதல்’ என்றும், தெலுங்கில் ‘ஹலோ பிரேமா’ என்றும் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ஆர்யாவுடன் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

படத்தின் கதாநாயகிகளுடன் ஆர்யா இடம்பெற்றுள்ள வண்ணமயமான போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளதுடன், நாளை மாலை 5 மணிக்கு டிரெய்லர் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.

ஏற்கனவே வெளியான இப்படத்தின் ‘கண்ணும் கண்ணும்’, ‘நிறைவே’ ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

நட்சத்திரப் பட்டாளம்

ஆர்யாவின் 40ஆவது திரைப்படமாக உருவாகியுள்ள இதில், நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா, முரளி சர்மா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மலையாளத்தில் வெளியான ‘பிரணய விலாசம்’ திரைப்படத்தை இயக்கிய நிகில் முரளி இப்படத்தை இயக்கியுள்ளார். சுனு ஏ.வி. மற்றும் ஜோதிஷ் எம். ஆகியோர் கதையை எழுதியுள்ளனர். இயக்குநர் ஹலிதா ஷமீம் கூடுதல் திரைக்கதை மற்றும் தமிழ் வசனங்களை எழுதியுள்ளார்.

தொழில்நுட்பக் குழு

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஜீவா சங்கர் ஒளிப்பதிவையும், பினு நெப்போலியன் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர். ஏ.ஆர். மோகன் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

ஆர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான The Show People மற்றும் Silver Grain Pictures ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. இதன் இசை வெளியீட்டு உரிமையை Think Music நிறுவனம் பெற்றுள்ளது.

இத்திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நாளை வெளியாகவுள்ள டிரெய்லர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments