Monday, November 23, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் வாட்ஸ்அப் சேவை முடங்கும் அபாயம்!

கனடாவில் வாட்ஸ்அப் சேவை முடங்கும் அபாயம்!

கனடாவில் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலம் நடைமுறைக்கு வந்தால், வாட்ஸ்அப் போன்ற மறைகுறியாக்கப்பட்ட (End-to-End Encryption) தகவல் பரிமாற்றச் சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கனேடிய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் Bill C-22 எனப்படும் சர்ச்சைக்குரிய சட்டமூலம், தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்கள் மற்றும் தரவுகளை சட்ட அமுலாக்க அதிகாரிகள் அணுகுவதற்கான அதிகாரத்தை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சட்டமூலம் நடைமுறைக்கு வந்தால், முழுமையான மறைகுறியாக்க வசதியை வழங்கும் தமது சேவைகளை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என சில முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

குறிப்பாக, கனடாவில் வாழும் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் முக்கியமான தகவல் தொடர்பு சாதனமாக விளங்குவதால், இந்த விவகாரம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

2022ஆம் ஆண்டு அகதியாக கனடாவுக்கு வந்த ரேமண்ட் குகீனா (Raymond Gukiina), உகாண்டாவில் உள்ள தனது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதற்காக வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தியுள்ளார்.

அத்துடன், டொராண்டோவில் தங்குமிட வசதியின்றி வீதிகளில் வசித்த அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவும் நோக்கில் வாட்ஸ்அப் குழுவொன்றையும் ஆரம்பித்துள்ளார்.

தங்குமிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வீதிகளில் வசித்தவர்கள் தங்குமிடங்கள், சேவைகள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காகவே இந்தக் குழு உருவாக்கப்பட்டது.

தற்போது, அந்த வாட்ஸ்அப் குழுவிலிருந்து வளர்ச்சியடைந்த National Network for Immigrants and Refugees-Canada என்ற இலாப நோக்கற்ற அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராக குகீனா செயற்பட்டு வருகிறார்.

வாட்ஸ்அப் சேவை முடக்கப்பட்டால் அது மிகப்பெரிய துயரமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாண்ட்ரீயலைத் தளமாகக் கொண்ட The Refugee Centre அமைப்பின் மத்திய அரசாங்க உறவுகளுக்கான பணிப்பாளர் அலினா முராட், அகதிகளின் மீள்குடியேற்றம் மற்றும் சமூக ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளில் வாட்ஸ்அப் மிகவும் முக்கியமான கருவியாக விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய இந்தச் சேவை அகற்றப்பட்டால், அகதிகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, Bill C-22 சட்டமூலம் தொடர்பான விவாதங்கள் கனடாவில் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments