Monday, November 23, 2026
spot_img
HomeUncategorizedகனடாவின் ரெஜினா நகரில் பேருந்து சேவைகள் முடக்கம்!

கனடாவின் ரெஜினா நகரில் பேருந்து சேவைகள் முடக்கம்!

கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்திலுள்ள ரெஜினா (Regina) நகரில் திங்கட்கிழமை முதல் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் முழுமையாக இடைநிறுத்தப்படவுள்ளதாக நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

நகர நிர்வாகத்திற்கும் உள்ளூர் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கமான Amalgamated Transit Union (ATU) Local 588 இற்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திங்கட்கிழமை அதிகாலை 3 மணிமுதல் ரெஜினா போக்குவரத்து நிலையங்கள், பேருந்து தரிப்பிடங்கள் மற்றும் வாகனப் பணிமனைகளுக்குள் நிர்வாக மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திங்கட்கிழமை காலை 11 மணிக்கு உத்தியோகபூர்வ பணிமுடக்க நடவடிக்கை ஆரம்பமாகும் என நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை முதல் தொழிலாளர்கள் மேலதிக நேரப் பணிகளைத் தவிர்க்கும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதால், குறைந்தபட்ச போக்குவரத்துச் சேவையைக்கூடத் தொடர்ந்து வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நகர நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், இந்தச் சேவை இடைநிறுத்தம் நகர நிர்வாகத்தின் தீர்மானமே தவிர, தொழிற்சங்கத்தின் விருப்பமல்ல என ATU கனடா அமைப்பின் தலைவர் ஜோன் டி நினோ தெரிவித்துள்ளார்.

மேலும், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான புதிய கூட்டு ஒப்பந்தம் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னார்வ மேலதிக நேரப் பணிகளைத் தவிர்ப்பதாக தொழிற்சங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, நகர நிர்வாகமே போக்குவரத்துச் சேவைகளை இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வழக்கமான போக்குவரத்துச் சேவைகளை வழங்குவதற்கு மேலதிக நேரப் பணிகளைச் சார்ந்திருப்பது, போதியளவு பணியாளர்கள் இல்லாததையே எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, திங்கட்கிழமை காலை தொழிலாளர்கள் வழமைபோன்று பணிக்கு வருகை தருவார்கள் எனவும் தொழிற்சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், காலநிலை மேலும் குளிர்ச்சியடைந்து வருவதால், பொதுமக்கள் பேருந்துக்காக வெளியிடங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையைத் தவிர்க்கவும், நம்பகமான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்தவும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments