Thursday, November 26, 2026
spot_img
Homeகனடா செய்திகள்டொராண்டோவில் வீடு புகுந்து துப்பாக்கிச் சூடு – பிரபல இசைக் கலைஞர் பலி

டொராண்டோவில் வீடு புகுந்து துப்பாக்கிச் சூடு – பிரபல இசைக் கலைஞர் பலி

கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள செல்வந்தர்கள் வசிக்கும் காசா லோமா பகுதியில், வீடு புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிரபல இசைக் கலைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் 39 வயதுடைய மைக்கேல் எக்கர்ட் என டொராண்டோ பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

பெடல் ஸ்டீல் கிட்டார் இசைக்கலைஞரான மைக்கேல் எக்கர்ட், கனடாவின் பிரபல இசைக்குழுவான ஜேம்ஸ் பார்கர் பேண்ட் மற்றும் புளூ ரோடியோ இசைக்குழுவின் ஜிம் குடி, கிரெக் கீலோர் ஆகியோருடன் அண்மையில் கல்கரியில் நடைபெற்ற கிரே கப் ஆரம்ப நிகழ்ச்சியில் இசை நிகழ்த்தியிருந்தார்.

உயிரிழந்தவர் குறித்த வீட்டின் உரிமையாளரின் மகன் எனவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பொப்லர் பிளெயின்ஸ் வீதியில், செயின்ட் கிளேர் அவென்யூ மற்றும் அவென்யூ வீதி அருகே அமைந்துள்ள வீட்டில் அதிகாலை சுமார் 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சந்தேகநபர்கள் பலவந்தமாக வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த ஒருவரை எதிர்கொண்டுள்ளனர்.

இதன்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார். அவசர மருத்துவப் பிரிவினர் சம்பவ இடத்துக்கு வந்தபோது உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்ட அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் மேலும் மூவர் இருந்ததாகவும், அவர்களுக்கு எவ்வித உடல் காயங்களும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை!

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. சந்தேகநபர்கள் குறித்த விபரங்களையும் பொலிஸார் வெளியிடவில்லை.

வீட்டில் இருந்த ஏனையவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கொள்ளை நோக்கத்துடன் சந்தேகநபர்கள் வீட்டுக்குள் நுழைந்தார்களா என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்தச் சம்பவத்தில் குறித்த குடும்பத்தினர் திட்டமிட்டுத் தாக்கப்பட்டதாகக் கூறுவதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் அல்லது அதிகாலை 2 மணி முதல் 3 மணிக்குள் சந்தேகத்துக்கிடமான நடமாட்டங்களைக் கண்டவர்கள் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராக்கள் மற்றும் வாகனங்களில் உள்ள டாஷ் கமராக்களின் காணொளிப் பதிவுகளையும் பொலிஸார் கோரியுள்ளனர்.

விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால், குறித்த பகுதியில் பொலிஸாரின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments