சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ராஸ் தனூரா மீது யேமனின் ஹூதி கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தியதாக அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன.
இதன்படி, பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.5 வீதத்தால் அதிகரித்து 94.61 அமெரிக்க டொலராகவும், அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் விலை 2 வீதத்தால் அதிகரித்து 83.68 டொலராகவும் பதிவாகியுள்ளது.
ராஸ் தனூரா சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமாகவும் விளங்குவதால், இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கிலிருந்து உலகச் சந்தைக்கான எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்காவின் எண்ணெய் கையிருப்பு எதிர்பார்த்த அளவை விடக் குறைவாக அதிகரித்தமையும் விலை உயர்வுக்குப் பங்களித்துள்ளது.
இதேவேளை, 2027ஆம் ஆண்டுக்கான மசகு எண்ணெய் உற்பத்திக் கொள்கையைத் தீர்மானிப்பதற்காக OPEC+ நாடுகளின் அமைச்சர்கள் கூட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மற்றும் மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகள் சர்வதேச எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


