இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள நார்த் பிளாக் அரச கட்டடப் பகுதியில் இன்று காலை சிறிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்டடத்தின் ஒரு பகுதியிலிருந்து கரும்புகை வெளியேறுவதாக இன்று காலை 11.10 மணியளவில் டெல்லி தீயணைப்புத் திணைக்களத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் ஆறு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன்படி, காலை 11.25 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நார்த் பிளாக் கட்டடத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டதாகவும், அது உடனடியாக அணைக்கப்பட்டதாகவும் டெல்லி தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயமோ அல்லது உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும், தீ விபத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் சேதமடைந்துள்ளனவா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.


