டொராண்டோ மாநகர சபைக்கான உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நகரின் பல முக்கிய தொகுதிகளில் வெற்றி
வாய்ப்பை தீர்மானிப்பதில் கடுமையான போட்டி உருவாகியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல்களில் தற்போது பதவியிலிருக்கும் உறுப்பினர்களே (Incumbents) மீண்டும் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம் என்று கருதப்படும் போதிலும், இம்முறை நாட்டின் மத்திய அரசியல் களத்தில் பணியாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்நுழைவு மற்றும் சில தொகுதிகளில் நிலவும் கடுமையான எதிர்ப்புகள் காரணமாக, தேர்தல் முடிவுகள் மாற்றமடையக்கூடிய சாத்தியக் கூறுகளை ஏற்படுத்தியுள்ளன.
பார்க்டேல்-ஹை பார்க் (Parkdale-High Park), பீச்சஸ்-ஈஸ்ட் யார்க் (Beaches-East York) மற்றும் டொராண்டோ-டான்ஃபோர்த் (Toronto- Danforth) ஆகிய மூன்று தொகுதிகளில் தற்போதைய உறுப்பினர்கள் போட்டியிடாததால் அங்கு திறந்த போட்டி நிலவுகிறது.
டொராண்டோ-டான்ஃபோர்த் தொகுதியில் நீண்டகாலம் மாநகர சபை உறுப்பினராக இருந்த போலா பிளெட்சர் (Paula Fletcher) கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவரைத் தொடர்ந்து, அவருடன் இணைந்து பணியாற்றிய முன்னாள் பள்ளி அறங்காவலர் சாரா எர்ஹார்ட் களமிறங்கினார். இதற்கிடையில், யுனிவர்சிட்டி-ரோஸ்டேல் தொகுதியின் தற்போதைய உறுப்பினரான டயான் சாக்ஸ் (Dianne Saxe), வேட்புமனுத் தாக்கல் முடிவடைவதற்கு வெறும் ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக டொராண்டோ-டான்ஃபோர்த் தொகுதிக்கு மாறி மனுத்தாக்கல் செய்தார். இதனால் இத்தொகுதியில் 18 வேட்பாளர்கள் போட்டியிடும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
பீச்சஸ்-ஈஸ்ட் யார்க் தொகுதியில் போட்டியிட்ட பிராட் பிராட்ஃபோர்ட் மேயர் தேர்தலில் களமிறங்குவதால், அத்தொகுதியில் முன்னாள் கூட்டாட்சி லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நெய்ட் எர்ஸ்கைன்-ஸ்மித் (Nate Erskine-Smith), முன்னாள் ஊடகவியலாளர் நடாலி ஜான்சன் உட்பட 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பார்க்டேல்-ஹை பார்க் தொகுதியில் பிரபல சமூக ஆர்வலர் டயானா சான் மெக்னாலி மற்றும் பள்ளி அறங்காவலர் டெபி கிங் உட்பட 10
வேட்பாளர்கள் களத்திலுள்ளனர். யார்க் சவுத்-வெஸ்டன் (York South-Weston) தொகுதியில் பல தசாப்தங்களாக உறுப்பினராக இருக்கும் பிரான்சஸ் நுன்சியாட்டா (Frances Nunziata) மற்றும் சமூக ஆர்வலர் கியாரா படோவானி (Chiara Padovani) ஆகியோர் மீண்டும் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றனர்.
கடந்த 2022 தேர்தலில் நுன்சியாட்டா மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றிருந்தார். எனினும் இம்முறை டேனியல் டி ஜியோர்ஜியோ என்ற புதிய வேட்பாளரின் வருகை, நுன்சியாட்டாவுக்கு எதிரான வாக்குகளைப் பிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஸ்கார்பரோ சவுத்வெஸ்ட் (Scarborough Southwest) தொகுதியின் தற்போதைய உறுப்பினர் பார்த்தி கந்தவேல் (Parthi Kandavel),
ஒன்டாரியோ மாகாண பொலிஸாரின் (OPP) நிதியியல் குற்றப்பிரிவு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்,
வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
இருப்பினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை பார்த்தி கந்தவேல் மறுத்துள்ளார். இந்த நிலையில் அவரை தேர்தல்களத்தில் எதிர்ப்பதற்கு, முந்தைய தேர்தல்களில் போட்டியிட்ட கெவின் ரூபசிங்க உட்பட 7 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
டொராண்டோ சென்டர் தொகுதியில் தற்போதைய உறுப்பினர் கிறிஸ் மோய்ஸ் (Chris Moise) மற்றும் சமூக ஊடக பிரபலம் டேனியல் டேட்
இடையே பகிரங்கக் கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன. இவர்களுடன் தொழிலாளர் அமைப்புகளின் ஆதரவைப் பெற்ற குர்ரன்
ஸ்டிகட்ஸ் உட்பட 11 பேர் போட்டியிடுவதால், டொராண்டோ சென்டர் தொகுதியில் வாக்குகள் பல வழிகளில் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்கார்பரோ நோர்த் (Scarborough North) தொகுதியின் தற்போதைய உறுப்பினரும் TTC தலைவருமான ஜமால் மையர்ஸ் (Jamaal Myers),
இரண்டு முன்னாள் கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்கொள்கிறார்.
லிபரல் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹான் டாங் (Han Dong) மற்றும் அண்மையில் தேசிய அரசியலில் இருந்து விலகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் சென் (Shaun Chen) ஆகியோர் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர். அதேபோல், எட்டோபிகோக்-லேக்ஷோர் (Etobicoke-Lakeshore) தொகுதியில் தற்போதைய உறுப்பினர் அம்பர் மோர்லியை (Amber Morley) எதிர்த்து, முன்னாள் கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டெட் ஓபிட்ஸ் (Ted Opitz) போட்டியிடுகிறார்.
மாநகர சபையில் மேயரின் அதிகாரங்கள் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில், இத்தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் டொராண்டோ மாநகர
சபையின் அதிகாரச் சமநிலையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகிறது.


