Tuesday, October 27, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அர்னாப் புயல் தீவிரமடைந்தது!  

அர்னாப் புயல் தீவிரமடைந்தது!  

மேற்கு – மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த அர்னாப் (Arnab) சூறாவளி மேலும் வலுவடைந்து மிகத் தீவிர புயலாக மாறியுள்ளது. இதனால் இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் இன்றும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (27) அதிகாலை 2.30 மணியளவில், வட அகலாங்கு 15.9° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.4° பகுதியில், காங்கேசன்துறையிலிருந்து சுமார் 890 கிலோமீற்றர் வடகிழக்கில் புயல் மையம் கொண்டிருந்தது.

இந்தப் புயல் இன்று பிற்பகல் 5.30 மணி வரை மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (28) முற்பகல் 11.30 மணியளவில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கனமழைக்கு வாய்ப்பு

புயலின் நேரடித் தாக்கம் இலங்கைக்கு இல்லாவிட்டாலும், புயலை நோக்கி ஈர்க்கப்படும் காற்றோட்டம் நாட்டின் ஊடாக நிலவுவதால் தென்மேற்குப் பகுதிகளில் மழை பெய்யும் நிலைமை தொடரக்கூடும்.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இப்பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்று வீசும் அபாயம்

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அனர்த்தங்களைத் தவிர்க்க, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மக்களே, வானிலை அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவதானமாகச் செயற்படுங்கள்!

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments