Tuesday, October 27, 2026
spot_img
Homeகனடா செய்திகள்ஒன்ராறியோவில் மாணவர் நிதியுதவித் திட்டம் தொடர்பில் சர்ச்சை!

ஒன்ராறியோவில் மாணவர் நிதியுதவித் திட்டம் தொடர்பில் சர்ச்சை!

கனடாவின் ஒன்ராறியோ மாகாண அரசியல்வாதிகள் 147 நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் இன்று மீண்டும் மாகாண சட்டமன்றத்திற்குத் திரும்பவுள்ளனர்.

பிரீமியர் டக் ஃபோர்டின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், குறுகிய கால அமர்வாக 23 நாட்களுக்கு சட்டமன்ற நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

இந்த அமர்வில், ஒன்ராறியோ மாணவர் உதவித் திட்டமான OSAP தொடர்பான சர்ச்சைகள் முக்கிய விவாதப் பொருளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்சார் கல்லூரிகளில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்குமான OSAP கொடுப்பனவுகளை அடுத்த சில மாதங்களுக்கு மாகாண அரசு இடைநிறுத்தியுள்ளது. இதனால் மாணவர்களும் அவர்களது குடும்பத்தினரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சில கல்லூரிகளில் மாணவர் நிதியுதவி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாணவர்களுக்கான நிதியுதவித் திட்டத்தில் மானியங்களின் பங்கைக் குறைத்து, கடன்களின் பங்கை அதிகரிக்கும் வகையில் மாகாண அரசு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது.

கனேடிய ஊடகமான The Canadian Press தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தரவுகளின்படி, 2024–2025 கல்வியாண்டில் ஏழு தொழில்சார் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட OSAP மானியங்களின் மொத்தத் தொகை 385 மில்லியன் கனேடிய டொலர்களாக இருந்துள்ளது. இது மாகாணத்தின் அனைத்து அரச நிதியுதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கும் வழங்கப்பட்ட மானியத் தொகைக்கு இணையானதாகும்.

இந்நிலையில், தொழில்சார் கல்லூரிகளில் OSAP நிதிப் பயன்பாடு தொடர்பில் KPMG நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் தணிக்கையை ஆரம்பித்துள்ளது.

தணிக்கையின் ஆரம்பகட்ட முடிவுகளில் கண்டறியப்பட்ட தீவிரமான சந்தேகங்களைத் தொடர்ந்து, இந்த விவகாரம் ஒன்ராறியோ மாகாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான அமைச்சர் நோலன் குயின் தெரிவித்துள்ளார்.

எனினும், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகங்களுடன் தொடர்புடைய கல்லூரிகளின் பெயர்களை அவர் வெளியிடவில்லை.

இந்த விவகாரம் சட்டமன்ற அமர்வில் முக்கிய இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments