அரசியலமைப்பு ஜனநாயகம், அதிகாரப் பகிர்வு, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் நீண்டகால தேசிய உரையாடல் அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்டீவன் திரூவை சந்தித்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் அரசியலமைப்பு நிறுவனங்கள் சுயாதீனமாகவும் நம்பகத்தன்மையுடனும் செயற்படக்கூடிய வகையில் நிறுவனக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அரசாங்கம் அல்லது எதிர்க்கட்சியின் அரசியல் தேவைகளுக்காக மேற்கொள்ளப்படக் கூடாது என்றும், அரசியல் அதிகாரம் மாறினாலும் மக்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் பாதுகாப்பளிக்கும் வகையில் அவை திட்டமிடப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நீதித்துறையின் சுதந்திரம், செயல்திறன் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை ஆகியவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல என்றும், அவை ஒன்றையொன்று வலுப்படுத்த வேண்டியவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


