மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் நிலத்தில் கிடந்த நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (03) மாலை தனது வீட்டுக்கு முன்னால் உள்ள நாவல் மரத்திலிருந்து நிலத்தில் விழுந்து கிடந்த நாவல் பழத்தை சிறுவன் எடுத்து உண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி விழுந்த நிலையில், உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலத்தில் கிடந்த நாவல் பழத்தில் பாம்பின் விஷம் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், அது தொடர்பில் பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்புக்கான சரியான காரணத்தை உறுதி செய்வதற்காக சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


