Thursday, November 26, 2026
spot_img
Homeபொது செய்திகள்WhatsApp பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

WhatsApp பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

WhatsApp செயலியில் பயனர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துவந்த புதிய வசதியான செய்திகளை முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பும் (Message Scheduling) அம்சம் உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் Android மற்றும் iOS பயனர்கள் தாங்கள் விரும்பும் திகதி மற்றும் நேரத்தில் தானாகவே சென்றடையும் வகையில் செய்திகளை முன்கூட்டியே திட்டமிட முடியும்.

Newswire வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த வசதியைப் பயன்படுத்தி குறைந்தபட்சம் 10 நிமிடங்களுக்கு முன்பிருந்தும் அதிகபட்சம் 14 நாட்களுக்கு முன்பிருந்தும் செய்திகளைத் திட்டமிட முடியும்.

மேலும், சாதாரண குறுஞ்செய்திகள் மட்டுமன்றி புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் இணைய இணைப்புகளையும் தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் குழு உரையாடல்களில் திட்டமிட்டு அனுப்ப முடியும்.

எவ்வாறு இந்த வசதியைப் பயன்படுத்துவது?

WhatsApp உரையாடலில் செய்தி அல்லது புகைப்படம், காணொளியைத் தெரிவுசெய்த பின்னர் அனுப்பும் பொத்தானை அழுத்திப் பிடிக்க வேண்டும்.

அப்போது தோன்றும் திகதி மற்றும் நேரத்தைத் தெரிவுசெய்யும் வசதியின் மூலம், செய்தி சென்றடைய வேண்டிய நேரத்தைத் தீர்மானிக்க முடியும்.

அதனை உறுதிப்படுத்தியதும் குறித்த செய்தி உடனடியாக அனுப்பப்படாமல் திட்டமிடப்பட்ட செய்தியாகச் சேமிக்கப்படும்.

தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தாலும் செய்தி சென்றடையுமா?

இந்த வசதியின் மற்றுமொரு சிறப்பம்சமாக, செய்தியை அனுப்புபவரின் தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தாலும் அல்லது இணைய இணைப்பு இல்லாவிட்டாலும், திட்டமிட்ட நேரத்தில் செய்தி சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், திட்டமிடப்பட்ட செய்திகள் WhatsApp சேவையகங்களில் சேமிக்கப்பட்டு உரிய நேரத்தில் அனுப்பப்படும். மேலும், இந்தச் செய்திகள் End-to-End Encryption எனப்படும் முழுமையான மறையாக்கப் பாதுகாப்பையும் கொண்டிருக்கும்.

திட்டமிடப்பட்ட செய்திகளை நீக்க முடியுமா?

பயனர்கள் உரையாடலின் தகவல் பகுதியிலிருந்து திட்டமிடப்பட்ட செய்திகளைப் பார்வையிடவும், அவை அனுப்பப்படுவதற்கு முன்னர் நீக்கவும் முடியும்.

அவ்வாறு செய்தி நீக்கப்பட்டால், அதுகுறித்த எந்த அறிவிப்பும் பெறுநருக்கு அனுப்பப்படாது.

குழு உரையாடல்களைப் பொறுத்தவரையில், செய்தி திட்டமிடப்பட்ட நேரத்தில் குழுவில் அங்கத்தவர்களாக இருந்தவர்களுக்கு மட்டுமே அது சென்றடையும். அதன் பின்னர் குழுவில் இணைபவர்களுக்கு அந்தச் செய்தி கிடைக்காது.

உலகளாவிய அறிமுகம்

இந்தப் புதிய வசதி Android மற்றும் iOS பயனர்களுக்கு அடுத்த சில வாரங்களில் கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

எனவே, அனைத்து பயனர்களுக்கும் ஒரே நேரத்தில் இந்த வசதி கிடைக்காமல் இருக்கலாம். புதிய வசதியைப் பெற்றுக்கொள்ள பயனர்கள் தங்களது WhatsApp செயலியைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments