Home இந்தியா செய்திகள் கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாமிற்கு கட்டணம் வசூல் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாமிற்கு கட்டணம் வசூல் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

by admin

கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாமிற்கு எவ்வித கட்டணங்களுக்கும் வசூலிக்கக் கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோடைகால பயிற்சி முகாமுக்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; ‘தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழக மாணவ, மாணவிகள் எந்த விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவ்விளையாட்டுக்களில், மாணாக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மாவட்டந்தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும்.

இவ்விளையாட்டுப் பயிற்சி முகாமில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். அதன்படி இந்தாண்டு 29.4.2024 முதல் 13.5.2024 வரை கால்பந்து, வாலிபால், கபாடி, கூடைபந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும், அதற்காக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக் கட்டணமாக சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் மாணவர்களிடமிருந்து பயிற்சிக் கட்டணமாக 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் திமுக தமிழக மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் முயற்சி. விளையாட்டில் ஆர்வமுள்ள, துடிப்புமிக்க மாணவர்களை முடக்கிப் போடும் இந்த அரசின் செயலை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். விளையாட்டை ஊக்கப்படுத்துவோம் என்று ஒருபக்கம் கூறிக்கொண்டே, மறுபக்கம் அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், வழக்கம்போல் கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy