Home இந்தியா செய்திகள் 10 ஆண்டுகளில் பிரதமர் செய்தது என்ன? -முதல்வர் ஸ்டாலின் கேள்வி

10 ஆண்டுகளில் பிரதமர் செய்தது என்ன? -முதல்வர் ஸ்டாலின் கேள்வி

by admin

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், தென்காசி திமுக வேட்பாளர் ராணி, விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: “வீரத்தின் அடையாளமான விருதுநகருக்கும் தென்றல் வீசும் தென்காசிக்கும் வந்துள்ளேன். மக்களின் பெரும் ஆதரவே திராவிடமாடல் சாதனையின் அடையாளம். மக்களிடம் மாபெரும் எழுச்சியைப் பார்க்கிறேன்.

தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும். சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல் விலையை குறைத்துவிடுவார். ஆனால் விலையை உயர்த்தியது யார்?

மகளிர் தினத்தன்று சமையல் எரிவாயு உருளை விலையைக் குறைத்தார் பிரதமர் மோடி. எல்லா வருடமும்தான் மகளிர் தினம் வருகிறது, அப்போதெல்லாம் விலையைக் குறைத்ததில்லை. தேர்தல் வரும்போது அவருக்குக் கருணை வந்துவிடுகிறது. தேர்தலுக்குத் தேர்தல் மட்டும், கருணை சுரக்கும் வித்தியாசமான குணம் பிரதமருக்கு.

2013-இல்சமையல் எரிவாயு உருளை விலை ரூ.410, 2023-இல் அதன்விலை ரூ.1000-க்கு மேல் உயர்ந்துள்ளது. இதுதான் பிரதமர் மோடியின் சாதனை. 5 மாநில தேர்தல் வந்ததும், கூடவே பிரதமர் மோடிக்கு இரக்கம் வந்தது. உடனே சிலிண்டர் விலையை குறைத்தார். இப்போது மக்களவைத் தேர்தல் வருகிறது. அதனால் ரூ.100 விலை குறைத்திருக்கிறார். தேர்தலுக்கு தேர்தல் விலை குறைப்பு செய்வது பச்சோந்தி அரசியல் இல்லையா?

பிரதமராக நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய சொன்னால், 10 ஆண்டுகளாக எதையுமே செய்யாமல், விற்பனையாளர் போல வெட்கமின்றி விளம்பரம் செய்கிறார் பிரதமர் மோடி.அவரது வாக்குறுதிகளில் நம்பகத்தன்மையில்லை.வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு எல்லோருடைய வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படுமென்றார், ஆனால் ரூ.15 ஆயிரமாவது போட்டாரா? 15 ரூபாயாவது போட்டாரா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுமென்றாரே, அந்த வாக்குறுதி என்ன ஆனது?

சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் நலனுக்கு மத்திய பாஜக அரசு என்ன செய்தது? சீனப்பட்டாசுகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதை முழுமையாக தடை செய்வோம் எனக் கூறினார்கள். ஆனால், இன்று வரை, சட்ட விரோதமாக சீனப்பட்டாசுகள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் ரூ.1000 கோடி சரிவை சந்தித்தது. தொழில் நலிவடைந்துள்ள நேரத்தில், ஆடம்பரப் பட்டியலில் பட்டாசை சேர்ந்து 28 சதவிகித ஜிஎஸ்டி வரி போட்ட கட்சிதான் பாஜக.

ஆளுநருக்கும் ஸ்டாலினுக்கும் என்ன தனிப்பட்ட பிரச்னை இருக்கிறதா..? தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஆளுநர் இருக்கிறார். அதனால், அவரை எதிர்க்கிறோம்” எனப் பேசினார்.

 

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy