சத்தீஷ்கார் மாநிலத்தில் அடிக்கடி குடிபோதையில் வீட்டில் தகராறு செய்த தந்தையை 15 வயது சிறுமி கோடரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜஷ்பூர் மாவட்டத்தில் பாக்பஹார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
50 வயது நபர் ஒருவர் அடிக்கடி குடிபோதையில் வீட்டில் மனைவி மற்றும் மகளுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி வெளியே சென்றிருந்த நிலையில் தனது 15 வயது மகளுடன் தகராறு செய்துள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த சிறுமி, கோடரியால் தந்தையை வெட்டிக் கொன்றுள்ளார். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் தனது தந்தையை யாரோ கொலை செய்துவிட்டதாக சிறுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சிறுமி, தந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சிறுமியை கைது செய்த போலீசார் சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.