Saturday, April 19, 2025
spot_img
Homeஇலங்கை செய்திகள்மலையக மக்களுக்கு உரிமை இல்லை எனக் கூறும் உரிமை கிடையாது - ஜனாதிபதி

மலையக மக்களுக்கு உரிமை இல்லை எனக் கூறும் உரிமை கிடையாது – ஜனாதிபதி

அரசியல் செய்யும் உரிமை மற்றும் கருத்து சுதந்திரம் என்பவற்றை நாம் மதிக்கின்றோம். எனினும், அவற்றை அடிப்படையாகக்கொண்டு இந்நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக்கூட்டம் தலவாக்கலையில் சனிக்கிழமை(19) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

தேர்தலுக்காக கடந்த காலங்களில் மக்கள் பிரித்தாளப்பட்டனர். வடக்கு, தெற்கு, மலையகம் என வெவ்வேறாக பிரிந்து வெவ்வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கும் நிலைமைக்காணப்பட்டது. ஆனால் கடந்த தேர்தலின்போது மக்கள் இந்நிலைமையை மாற்றியமைத்தனர்.

அனைவரும் தேசிய மக்கள் சக்திக்கு பின்னால் திரண்டனர். எனவே, அனைத்து மக்களையும் சமமாக நடத்தக்கூடிய அரசாங்கமொன்றே தேவை. அவ்வாறானதொரு அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளது.

இந்நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமளிக்கமாட்டோம். இனவாதத்தை தோற்கடிப்பதற்கு நாட்டில் தற்போதுள்ள சட்டங்கள் போதவில்லையெனில் புதிய சட்டங்களை இயற்றியாவது இனவாத அரசியல் தோற்கடிக்கப்படும்.

எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு மலையக மக்கள் பெரும் பங்களிப்பு வழங்குகின்றனர். தமது உயிரைக்கூட இந்நாட்டின் மண்ணுக்காக உரமாக்கியுள்ளனர்.

எனவே, இலங்கை அவர்களின் நாடு அல்ல என எப்படி கூறமுடியும். இந்நாட்டில் பிறந்து, வளர்ந்து, இறக்கின்றனர் எனில் அவர்கள் எங்கிருந்து வந்தனர் எனக் தேடிக்கொண்டிருப்பதில் பயன் இல்லை.

மலையக மக்கள் இங்கு வந்து 200 வருடங்கள் கடந்துவிட்டன. தற்போது அவர்கள் எங்கிருந்து வந்தனர் என தேடுவதில் என்ன பயன் உள்ளது? எனவே, மலையக மக்களுக்கு உரிமை இல்லை எனக் கூறும் உரிமை கிடையாது.

நாம் மனிதர்கள். அனைவரினதும் உரிமைகளை ஏற்கும் அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

எமது நாட்டில் மக்களுக்கிடையில் மீண்டும் போர் ஏற்படாத வகையிலான நாடொன்றை நாம் கட்டியெழுப்புவோம் என்றார்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments