சென்னை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் கைவினை திட்டம் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.
குரு.சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் விழாவிற்கு முன்னிலை வகித்தார். இந்த விழாவில் 8,951 கைவினை கலைஞர்களுக்கு தலா ரூ.3 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசியதாவது:
அண்மையில் மத்திய அரசு விஸ்வகர்மா திட்டம் என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்தது.இந்த திட்டமானது குலக்கல்வியை மட்டும் ஆதரிக்கும் திட்டமாகவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் வளரச் செய்யும் திட்டமாகவும் இருந்தது. இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன் அந்த கடிதத்தில் விஸ்வகர்மா திட்டத்தில் உள்ள குறைகளை நீக்குமாறு எழுதி இருந்தேன். ஆனால் மத்திய அரசு எனது கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.
பின்னர் மத்திய அரசின் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகத்துக்கு எனது எதிர்ப்பை தெரிவித்து கடிதம் எழுதினேன்.
எந்த திட்டமாக இருந்தாலும் சமூகநீதியை, சமத்துவத்தை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் சமூகநீதிக்கானது அல்ல. சமூக நீதியை நிலைநாட்டும் வகையில், சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டாத வகையில், கைவினைக் கலைஞர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் உருவாக்கட்டதுதான் கலைஞர் கைவினைத் திட்டம். இதுதான் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டதற்கான அரசியல் பின்னணி.
விஸ்வகர்மா திட்டத்தின்மூலம் இளைஞர்களை குலத்தொழிலில் தள்ளிவிட மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சிக்கிறது. சாதிய வேறுபாடுகள் நிறைந்த இந்திய சமூகத்தில் விஸ்வகர்மா திட்டம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? இதனை மனசாட்சி உள்ள ஒருவர் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?.
மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தில் உள்ள அனைத்து குறைகளையும் நீக்கி திராவிட மாடல் அரசு கொண்டுவந்த கலைஞர் கைவினைத் திட்டம் பல கைவினை கலைஞர்களையும் வாழ வைக்கும் திட்டமாக இருக்கும்.
மானியத்துடன் கூடிய கடனுதவிகளை கைவினைக் கலைஞர்களுக்கு வழங்கும் திட்டம். இந்த திட்டமானது சம நீதியையும் சமூக நீதியையும் வளர்க்கும் திட்டமாக இருக்கும்.
1950-களில் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து களம் கண்ட தமிழ்நாடு, குலத்தொழில் திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த மாட்டோம்.
எனவே கைவினைக் கலைஞர்கள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திட வேண்டுகிறேன் என முதல்வர் கூறினார்.
விழாவில் அரசு உயர் அதிகாரிகள்,நாடாளுமன்றம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் கைவினைக் கலைஞர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.