வடகிழக்கு தில்லியில் முஸ்தபாஃபாத்தில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. தகவலறிந்தவுடன் தேசிய பேரிடர் மீட்புப் படை, தில்லி காவல்துறை மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் 11 பேர் பலியானார்கள்.
மேலும 11 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தரை தளத்தில் உள்ள கடைகளில் கட்டுமானப் பணிகள் கட்டடம் இடிந்து விழுந்ததற்கு வழிவகுத்திருக்கலாம் என்று போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்த கட்டடம் சுமார் 20 ஆண்டுகள் பழமையானது என்றும் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றும் தில்லி மாநகராட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த தில்லி முதல்வர் ரேகா குப்தா விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.
ஒரு புதிய கடையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் இடிபாடுகள் ஏற்பட்டிருக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். மேலும் கட்டடத்தில் நான்கு முதல் ஐந்து பகுதிகள் சேதடைந்த நிலையில் இருந்தது குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்தனர்
சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பல ஆண்டுகளாக கட்டடங்களின் சுவர்களில் ஊடுருவி வருகிறது. மேலும் காலப்போக்கில், ஈரப்பதம் கட்டடத்தை பலவீனப்படுத்தியுள்ளது. இதனால் சுவர்களில் விரிசல்கள் உருவாகியுள்ளன என்று மற்றொரு குடியிருப்பாளர் சலீம் அலி கூறினார்.