கனடாவின் ஆன்டாரியோ அருகேயுள்ள ஹாமில்டனில் அமைந்துள்ள மோஹாக் கல்லூரியில் நம் நாட்டைச் சேர்ந்த ஹர்சிம்ரத் ரந்தாவா என்ற 21 வயது இளம்பெண் உயர் கல்வி பயின்று வந்துள்ளார்.
இந்த நிலையில், அவர் கடந்த புதன்கிழமை இரவு ஹாமில்டன் பகுதியிலுள்ளதொரு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, அங்கே நின்றிருந்ததொரு கறுப்பு காரில் இருந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அப்பகுதியில் நின்றிருந்ததொரு வெள்ளை காரில் இருந்தவர்களைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சண்டையில், அங்கே நின்று கொண்டிருந்த அந்த இளம்பெண் மீது எதிர்பாராதவிதமாக குண்டு பாய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. குண்டடி பட்டதில் அவர் கீழே மயங்கி விழுந்தார்.
இதனைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு பற்றிய தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த கொலையில் ஈடுபட்ட நபர்களை கண்டுபிடிக்க, சம்பவ இடத்திலிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை தீவிரமாக ஆராய்ந்து வரும் அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இளம்பெண் கொலை திட்டமிடப்பட்டதா அல்லது விபத்தா என்ற கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவராவார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கனடாவிலுள்ள இந்திய தூதரகம், மாணவி குடும்பத்தாருடன் தொடர்பிலிருப்பதாகவும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் இன்று(ஏப். 18) தெரிவித்துள்ளது.