Friday, April 4, 2025
spot_img
Homeஉலக செய்திகள்ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் பெரும் செல்வந்தர் பட்டியல் – முதலிடத்தில் எலோன் மஸ்க்

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் பெரும் செல்வந்தர் பட்டியல் – முதலிடத்தில் எலோன் மஸ்க்

அமெரிக்காவின் பிரபல சஞ்சிகையான ஃபோர்ப்ஸின் 2025ஆம் ஆண்டின் பெரும் செல்வந்தர் பட்டியலை கடந்த செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில், எலோன் மஸ்க் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளார். கடந்த சில நாட்களாகவே, நிதி தொடர்பான விடயங்களில் ட்ரம்புடன் சேர்ந்து, பல விமர்சனங்களுக்கு முகங்கொடுத்திருந்த போதும், உலக செல்வந்தர் பட்டியலில், மீண்டும் அவர் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1987ஆம் ஆண்டு முதல் வெளியாகிவரும் இப்பட்டியல் இவ்வருடத்துடன் 39ஆவது வருடத்தை எட்டியுள்ளது. இதில், 206 செல்வந்தர்கள் குறித்த தகவல்கள் அடங்கியுள்ளன.

சிறந்த சொத்து மதிப்பைக் கொண்ட 15 நபர்கள் இப்பட்டியலில் அடங்கியுள்ளனர். இது கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், மிகவும் அதிகமான தொகையாகும். குறிப்பாக இவர்களின் மொத்த சொத்து மதிப்பு, 16.1 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும் .

மேலும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியும், எக்ஸ் சமூகதளத்தின் உரிமையாளருமான எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 75 வீதம் அதிகரித்து, 342 பில்லியன் அமெரிக்க டொலர்களை அடைந்துள்ளது.

இந்நிலையில், 300 பில்லியன் அமெரிக்க டொலர்களை அடைந்த முதலாவது நபர் என்ற பெருமையையும் எலோன் மஸ்க் பெற்றுள்ளார்.

ஃபோர்ப்ஸில் இடம்பெற்றுள்ள முதல் பத்து செல்வந்தர்கள் தொடர்பான தகவல்களை கீழே காணலாம்.

1. எலோன் மஸ்க் (Elon Musk) – வயது 53 – அமெரிக்கா

சொத்து மதிப்பு – 342 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா மோட்டார்ஸ் உட்பட 7 நிறுவனங்களுக்கு சொந்தக்காரரான எலோன் மஸ்க், இப்பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.

2. மார்க் சுக்கர்பேர்க் (Mark Zuckerberg) – வயது 40 – அமெரிக்கா

சொத்து மதிப்பு- 216 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

2004ஆம் ஆண்டு, 19ஆவது வயதில், மார்க் சுக்கர்பேர்க் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ‘பேஸ் புக்’ சமூகவலைதளத்தை உருவாக்கினார். இதன் மூலம் அவர் உலக பிரசித்தி பெற்றதுடன், உலகின் பெரும் செல்வந்தர் பட்டியலிலும் இணைந்தார்.

3. ஜெவ்ப் பெஸோஸ் (Jeff Bezos) – வயது 61 – அமெரிக்கா

சொத்து மதிப்பு – 216 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

உலக செல்வந்தர் பட்டியலில் மூன்றாவது இடம்பிடித்துள்ள ஜெவ்ப் பெஸோஸ், பிரபல வணிக நிறுவனமான, அமேஸோனின் நிறுவனர் ஆவார்.

4. லேரி எலிஸன் (Larry Ellison) – வயது 80 – அமெரிக்கா

சொத்து மதிப்பு – 192 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

ஒரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், நிர்வாகத் தலைவரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான லேரி எலிஸன் இந்த பட்டியலில் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளார்.

5. பெர்னார்ட் அர்னோல்ட் (Bernard Arnault) – வயது 76 – பிரான்ஸ்

சொத்து மதிப்பு – 178 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

கடந்த 2023ஆம் ஆண்டு, ஃபோர்ப்ஸின் உலக செல்வந்தர் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்த பெர்னாட் அர்னோல்ட், இந்த வருடம் 5ஆம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார். பிரபல LVMH நிறுவனத்தின் தலைவரான இவரின் அன்றைய சொத்துமதிப்பு 211 பில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 178 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்மை குறிப்பிடத்தக்கது.

6. வாரன் பஃபெட் (Warren Buffett) – வயது 94 – அமெரிக்கா

சொத்து மதிப்பு – 154 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

இப்பட்டியலில் 6ஆம் இடத்தைப் பெற்றுள்ள வாரன் பஃபெட், உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களுள் ஒருவராக அறியப்படுகின்றார். “Oracle of Omaha” நிறுவனத்தின் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ள இவர், அந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாய் விளங்குகின்றார். மேலும், 2008ஆம் ஆண்டு பட்டியலில் இவர் முதலிடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

07. லேரி பேஜ் (Larry Page) – வயது – 52 – அமெரிக்கா

சொத்து மதிப்பு – 144 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான லேரி பேஜ் தான், கூகுள் நிறுவனத்துக்கு அடித்தளமிட்டவர் என்று கூறப்படுகின்றது. இருப்பினும் அவர், கடந்த 2019ஆம் அந்நிறுவனத்திலிருந்து விலகிய நிலையில், சில வருடங்களாக இவர் பற்றி பெரியளவில் பேசப்படாமல் இருந்தது. இந்நிலையில், இப்பட்டியலில் இவருக்கு 07 ஆம் இடம் கிடைத்துள்ளது.

08. செர்ஜி ப்ரின் (Sergey Brin) – வயது 51 – அமெரிக்கா

சொத்து மதிப்பு – 138 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

கூகுளின் இணை நிறுவனர்களில் ஒருவரான செர்ஜி ப்ரினுக்கு இப்பட்டியலில் 8ஆம் இடம் கிடைத்துள்ளது. அல்பாபெட்டின் தலைவர் பதவியில் இருந்த செர்ஜி, கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இப்பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

09. அமன்சியோ ஒர்டேகா (Amancio Ortega) – வயது 89 – ஸ்பெயின்

சொத்து மதிப்பு – 124 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

கடந்த 2023ஆம் ஆண்டு, இப்பட்டியலில் 14ஆவது இடத்தைப் பெற்றிருந்த அமன்சியோ ஒர்டேகா, இந்த வருடம் 9ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இவர், ஒரு சில்லறை விற்பனை தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

10. ஸ்டீவ் பல்மர் (Steve Ballmer) – வயது 69 – அமெரிக்கா

சொத்து மதிப்பு – 118 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

ஸ்டீவர் பல்மர், அமெரிக்க தொழில்நுட்ப வணிக நிறுவனமான மைக்ரோசொப்ட்டின் முதன்மை செயல் அதிகாரியாவார். இந்நிறுவனத்தின் ஆரம்ப காலங்களில் சாதாரண ஊழியராக பணியாற்றி வந்த இவர், பின்னர் அதே நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments