ஈழத்தமிழர்களின் இன, மத அடையாளங்களை உறுதிசெய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடவுச்சீட்டுக்கான புகைப்படங்களை எடுக்கும் போது பெண்கள் நெற்றியில் பொட்டிடக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தை மேற்கோள் காட்டி, இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே சிறீதரன் எம்.பி மேற்குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடவுச் சீட்டுக்கான புகைப்படங்களை எடுக்கும் போது, தமிழ்ப் பெண்கள் பொட்டிடுவதும், இந்துசமய குருமாராக இருந்தால் அவர்கள் விபூதி, சந்தனம் உள்ளிட்ட மத அடையாளங்களைத் தரித்திருப்பதும் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டுமென, அகில இலங்கை அரச உரிமை பெற்ற புகைப்படப்பிடிப்பாளர் சங்கத்தினரால், வடக்கு மாகாண புகைப்படப்பிடிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
அந்தவகையில், மேற்குறித்த அறிவிப்பானது தமிழ் மக்களின் இன, மத அடையாளங்களை வலிந்து பறிக்கும் ஓர் அடிப்படை உரிமை மீறலாக உள்ளதை தங்களின் மேலான அவதானத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
குறிப்பாக, தமிழர்களது மரபார்ந்த பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றாகவே தமிழ்ப் பெண்கள் பொட்டிடும் பழக்கத்தை காலம்காலமாக பின்பற்றி வருகிறார்கள். ஒரு இனத்தின் உணர்வுநிலையோடு ஒன்றித்துப் போயுள்ள இயல்பான வாழ்வியல் விடயங்களை, தார்மீக காரணங்கள் எவையுமற்று தடுக்க நினைப்பதும், அதுசார்ந்த செயற்பாடுகளை அதிகாரரீதியாக நடைமுறைப்படுத்துவதும் மிகமோசமான அடக்குமுறையே என்பதையும், உணர்வுநிலைசார் பண்பாட்டு அடையாளப் பறிப்பென்பது எத்தகைய தாக்கங்களை உருவாக்கக்கூடும் என்பதையும் தாங்கள் உணர்ந்துகொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
குடியகல்வுத் தேவைகளின் பொருட்டு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள விரும்பும் ஒரு ஈழத்தமிழர், கடவுச்சீட்டுக்கான புகைப்படத்தை எடுக்கும்போது தனது இனம் சார்ந்த, மதம் சார்ந்த தனித்துவ அடையாளங்களைத் துறந்தே ஆக வேண்டுமென்ற எந்தத் தேவைப்பாடும் இல்லாத நிலையில், இந்த நாட்டுப் பிரஜைகளின் அடிப்படை உரிமையை மீறும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மேற்படி அறிவுறுத்தலை உடனடியாக மீளப்பெறுவதன் மூலம், தமிழ் மக்களின் தனித்துவ அடையாளங்களையும், அடிப்படை உரிமைகளையும் உறுதிசெய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன் – என்றுள்ளது.