ஸ்டிக்கர் ஒட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பத்து நாட்களுக்கும் மேலாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் இளைஞரின் குடும்பத்தினர், அவர் மீதான குற்றச்சாட்டுகளை பொலிசார் தெரிவிக்காமையால் அச்சமடைந்துள்ளனர்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையீடு செய்துள்ள மொஹமட் ருஷ்டியின் தாய், அதிகாரிகள் அவருக்கு எதிராக பொய்யான வழக்கை சோடிக்கலாம் என சந்தேகிக்கிறார்.
கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி கொம்பனி வீதி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 23 வயதான முஸ்லிம் இளைஞன், 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவில், பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) எச்சரிக்கையுடன் பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ள தற்போதைய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இந்த உத்தரவில் கையொப்பமிட வேண்டும்.
“அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் இன்று வரை எமக்கு அறிவிக்காத பொலிஸார் அவர் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் எவ்வித விளக்கமும் வழங்கவில்லை,” என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர் கலாநிதி கெஹான் குணதிலக ஆகியோருக்கு புதன்கிழமை (3) அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எனது மகனைக் தடுத்து வைத்தது தவறு என நாங்கள் உறுதியாக நம்புகிறோம், மேலும் அவர் மீது அதிகாரிகள் பொய் வழக்குகளைப் பதிவு செய்ய முயற்சிப்பார்கள் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. அவர் இருக்கும் சூழ்நிலை எங்கள் குடும்பத்திற்கு மிகவும் கவலை அளிக்கிறது. அவரை உடனடியாக விடுவிக்க மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிடுமாறு நாங்கள் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்,” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமதி. ருஷ்டி தனது மகனின் சிறைக்காவல் நிலைமையை விசாரணை செய்ய மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதிநிதியை அவரிடம் அனுப்ப வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். மொஹமட் ருஷ்டி “ஏதோ ஒரு வகையில் பயங்கரவாதச் செயலைச் செய்யத் திட்டமிடும் நபர் என்ற நியாயமான சந்தேகத்தின் பேரில்” கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
“இச்சந்தேக நபரின் செயற்பாடுகள் தொடர்பில் நீண்டகாலமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வெளியாகியுள்ள உண்மைகளின் அடிப்படையில் அவர் இணையம் மற்றும் பிற முறைகளை பயன்படுத்தியமையினால் சில மன உந்துதல்களுக்கு உள்ளானவர் என்பது அவதானிக்கப்பட்டுள்ளதால், அந்த மனநிலையின் அடிப்படையில் அவர் மத தீவிரவாதத்தில் ஈடுபட்டமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை உலமா சபையில் முன்னிலைப்படுத்தியதாகவும், ருஷ்டி முஸ்லிமின் நிலையைத் தாண்டிய நிலை இருப்பதாகவும் அவருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் எனவும் சபை அறிவித்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் அறிக்கையை உறுதிப்படுத்தாத அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை (ACJU), ருஷ்டி கைது செய்யப்பட்டமை கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல் என வன்மையாகக் கண்டித்துள்ளது.
“நமது பிரதிநிதிகள் இந்த கைது சம்பந்தமாக காவல்துறையினரை தொடர்புகொண்டபோது, சுவர் ஒட்டி காரணமாக மாத்திரமே குறித்த இளைஞர் கைது செய்யப்படவில்லை என்றும் கூடுதல் காரணங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ளவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உத்தியோகபூர்வ பதிவுகளை ஜம்இய்யா கோரியுள்ளது,” என உலமா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரமான மற்றும் சுயாதீனமான பலஸ்தீன அரசை ஆதரிக்கும் உலமா சபையின் அறிவிப்பு அந்த மண்ணில் நடத்தப்படும் சட்டவிரோத இனப்படுகொலையை வன்மையாகக் கண்டித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞன் ஒட்டியுள்ள ஸ்டிக்கரில் பாலஸ்தீனத்தை தாக்கியதற்காக ஃபக் இஸ்ரேல் என்ற ஆங்கில வாசகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
மொஹமட் ருஷ்டியின் கணினி வன்பொருள், தகவல் தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் கைத்தொலைபேசி குறித்து தடயவியல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறுகின்றனர்.