இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து கடந்த 2-ந்தேதி மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பைக்கு புறப்பட்ட ‘விர்ஜின் அட்லாண்டிக்’ விமானம், துருக்கி நாட்டின் தியார்பகிர் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மருத்துவ காரணங்களுக்காக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது. இருப்பினும் விமானம் தரையிறங்கிய பிறகு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விமானம் தரையிறங்கி சுமார் 40 மணி நேரத்திற்கு மேலாகியும், விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு மாற்று விமானத்திற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் சுமார் 250 இந்திய பயணிகள் துருக்கி விமான நிலையத்தில் பரிதவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான பயணிகளின் உறவினர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதனிடையே, பயணிகள் அனைவரும் ஒட்டல் அறைகளில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ‘விர்ஜின் அட்லாண்டிக்’ விமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்த விவகாரத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாக துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.