ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இணைந்து அனுப்பிய ‘பெப்பிகொலம்போ’ என்ற இரட்டை விண்கலம், புதன் கோளின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள கோளான புதனை ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதற்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் (ESA), ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமும் (JAXA) இணைந்து இரண்டு ரோபோ ஆய்வுக் கலன்களைக் கொண்ட ‘பெப்பிகொலம்போ’ விண்கலத்தை உருவாக்கின.
கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி, ‘ஏரியன்-5’ ரொக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. நீண்ட பயணத்தை மேற்கொண்ட இந்த விண்கலம், புதன் கோளை ஆய்வு செய்வதற்கான முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
இதன் மூலம், புதன் கோளுக்குச் சென்ற மூன்றாவது விண்கலத் திட்டமாக இது அமைந்துள்ளது. இதற்கு முன்னதாக, 1970களில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ‘மரைனர் 10’ விண்கலம் புதன் கோளை மூன்று முறை கடந்து ஆய்வு செய்தது.
அதனைத் தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு புதன் கோளின் சுற்றுப்பாதையில் நுழைந்த நாசாவின் ‘மெசெஞ்சர்’ விண்கலம், எரிபொருள் தீர்ந்ததைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு புதன் கோளில் மோதி தனது பணியை நிறைவு செய்தது


