செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் இயங்கும் தானியங்கி ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்களைக் கட்டுப்படுத்துவதற்கான கடுமையான விதிகளை உருவாக்குவதில் ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையில், இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க ஐ.ந. மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஒரு வார காலமாக நடைபெற்ற ஐ.ந. ஆயுதக் கட்டுப்பாட்டு மாநாடு நேற்று நிறைவடைந்தது. மனிதக் கட்டுப்பாடின்றி தாக்குதல் நடத்தக்கூடிய தானியங்கி ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் விதிகளை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க பிரேஸில், ஆஸ்திரியா, மெக்ஸிகோ உள்ளிட்ட ஏழு நாடுகள் முன்மொழிந்தன.
எனினும், நவீன செயற்கை நுண்ணறிவு ஆயுதத் தயாரிப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய நடைமுறை காரணமாக, 2028ஆம் ஆண்டுக்குள் சாத்தியமான உடன்படிக்கையை உருவாக்குவது தொடர்பில் தொடர்ந்து ஆலோசிக்க மட்டுமே நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
தானியங்கி ஆயுதங்களுக்கு சட்டரீதியான கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் உறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதாக பிரேஸில் தூதுவர் ஃபெடரிகோ மேயர் கவலை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே போர்க்களங்களில் தானியங்கி ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இவ்விவகாரத்தில் 14ஆவது ஆண்டாக பேச்சுவார்த்தைகள் மட்டுமே தொடர்வது ஏமாற்றமளிப்பதாக ‘Stop Killer Robots’ உள்ளிட்ட அமைப்புகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.


