முடி உதிர்வு மற்றும் வழுக்கைத்தலைப் பிரச்சினைக்குத் தீர்வாக, முடி மீண்டும் வளர்ச்சியடைவதைத் தூண்டும் புதிய மின்னணுச் சீப்பை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தி ஆய்வகத்தில் எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், வெறும் 28 நாட்களில் சுமார் 98 சதவீத முடி வளர்ச்சியைப் பெற முடிந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெய்ஜிங்கிலுள்ள பீஹாங் பல்கலைக்கழகத்தின் (Beihang University) ஆராய்ச்சியாளர்களும், ஹொங்கொங் நகரப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இணைந்து இந்தப் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
‘டிடேங்கிள்’ (Detangle) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மின்னணுச் சீப்பு தொடர்பான ஆய்வு முடிவுகள், கடந்த நவம்பர் 3ஆம் திகதி Nature Communications என்ற அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன.
பாரம்பரியமாக முடி உதிர்வைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்துகளைப் போன்று அல்லாமல், இந்தச் சீப்பு மிதமான மின்தூண்டலையும், முடி வேர்ப்பகுதிகளுக்கு நேரடியாகச் சிகிச்சை மூலக்கூறுகளைச் செலுத்தும் தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்கிறது.
இதற்காகச் சீப்பின் பற்களில் சிறிய மின்முனைகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை தலைமுடியைச் சீவும் போது மின்துடிப்புகளை உருவாக்கி, சிகிச்சை மூலக்கூறுகள் தோலின் ஆழமான பகுதிகளுக்குச் சென்று முடி வேர்களைச் சென்றடைய உதவுகின்றன.
எனினும், இந்த ஆய்வு முடிவுகள் இதுவரை விலங்குகள் மீதான பரிசோதனைகளில் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மனிதர்களில் முடி மீண்டும் வளர்வதை உறுதிப்படுத்தும் மருத்துவப் பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, இந்தச் சாதனத்தின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நீண்டகாலப் பயன்பாட்டு விளைவுகளை உறுதிப்படுத்த மேலதிக ஆய்வுகளும் மனிதர்கள் மீதான மருத்துவப் பரிசோதனைகளும் அவசியம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் வழுக்கைத்தலைப் பிரச்சினைக்குப் புதிய சிகிச்சை முறையை உருவாக்குவதற்கான முக்கியமான ஆராய்ச்சி முன்னேற்றமாக இது கருதப்படுகிறது.


