Monday, November 23, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வடக்கில் தீவிர சோதனை

வடக்கில் தீவிர சோதனை

பருவமழை நெருங்கி வரும் நிலையில், டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பருத்தித்துறையில் சமூக மட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நுளம்புக் குடம்பிகள் பெருகக்கூடிய வகையில் சுற்றுச்சூழலைப் பராமரித்த 15 குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபையின் ஏற்பாட்டில், நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட தும்பளை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் நேற்று (21) இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, குறித்த கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடுகள், வியாபார நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் விரிவான களப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மொத்தமாக 284 இடங்கள் பரிசோதிக்கப்பட்டதில், 118 இடங்கள் நுளம்புகள் பெருகக்கூடிய அபாயகரமான சூழல்களாக அடையாளம் காணப்பட்டன. மேலும், 16 இடங்களுக்கு சிவப்பு அறிவித்தல்கள் வழங்கப்பட்டதுடன், நுளம்புக் குடம்பிகள் காணப்படும் வகையில் சுற்றுச்சூழலைப் பராமரித்த 15 குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, வவுனியா நகரைச் சூழவுள்ள பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், பலர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது நிறுவனங்களின் வளாகங்களில் மழைநீர் தேங்கக்கூடிய பழைய டயர்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், யோகட் கோப்பைகள், தேங்காய் சிரட்டைகள், உடைந்த வாளிகள் மற்றும் தகரக் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், தண்ணீர் சேமிக்கும் கலன்களை மூடி வைப்பதுடன், வீட்டுத் தோட்டங்கள் மற்றும் சுற்றுப்புறங்களை வாரத்திற்கு குறைந்தது ஒருமுறையாவது சுத்தப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல், தலைவலி அல்லது உடல்வலி போன்ற அறிகுறிகள் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக அரச வைத்தியசாலைக்குச் சென்று மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் சோதனைகளின்போது நுளம்புகள் பெருகும் இடங்கள் அல்லது குடம்பிகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments