முல்லைத்தீவு மற்றும் மன்னார் கல்வி வலயங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளநிலையங்களை அமைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முன்வைத்த கோரிக்கைக்கு, 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தின் ஊடாக கவனம் செலுத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (08) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 74.84 சதவீதமான கணினிகளும், 82.76 சதவீதமான பல்லூடக எறிவிகளும் செயலிழந்த நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டிய ரவிகரன் எம்.பி., வன்னி தேர்தல் மாவட்டத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் கல்வி வலயங்களில் இதுவரை தகவல் தொழில்நுட்ப வளநிலையங்கள் அமைக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
கணினி வளநிலையங்கள் அமைக்கப்படுவதன் மூலம் பாடசாலைகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை முறையாக பராமரிப்பதுடன், கல்வி வலய ஆளணியினரின் தகவல் தொழில்நுட்ப அறிவையும் மேம்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, ரவிகரனின் கோரிக்கை நியாயமானது எனத் தெரிவித்ததுடன், வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட சில மாகாணங்களில் போதிய கணினி வளநிலையங்கள் இல்லையெனவும் குறிப்பிட்டார்.
2026ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் சில பகுதிகளுக்கு புதிய கணினி உபகரணங்கள் வழங்கப்படாத நிலைமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இதனையடுத்து, ஐந்தாண்டு கால செயற்றிட்டம் ஒன்றை 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் முன்மொழியவுள்ளதாகவும், திருத்தக்கூடிய உபகரணங்களை பழுதுபார்ப்பதற்கும், திருத்த முடியாத உபகரணங்களுக்கு பதிலாக புதிய உபகரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மேலும், இருமொழிக் கல்வியை பாடசாலைகளில் ஆரம்பிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் கல்வி வலயங்களில் உள்ள நிலையங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் ஐந்தாண்டு செயற்றிட்டத்தில் உள்ளடக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டார்.


