கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர், ஒன்ராறியோ மாகாணத்தின் லண்டன் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அயூப் மொஹமட் (Ayoub Mohammed) என அடையாளம் காணப்பட்ட குறித்த இளைஞர், செவ்வாய்க்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனடா முழுவதும் தேடப்படும் நபருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் அடிப்படையில், அவரைக் கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு கியூபெக் மாகாண பொலிஸார் லண்டன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, லண்டன் பொலிஸாரின் அவசர நடவடிக்கைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பொலிஸ் பிரிவுகளின் உதவியுடன் டண்டாஸ் வீதியிலுள்ள விடுதியொன்றில் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரைச் சுற்றிவளைத்து எவ்வித அசம்பாவிதங்களுமின்றிப் பாதுகாப்பாகக் கைது செய்ய முடிந்ததாக லண்டன் பொலிஸ் சேவையின் குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த துப்பறியும் அதிகாரி ஜெனிபர் நோயல் தெரிவித்துள்ளார்.
மேலும், கனடாவின் தேடப்படும் குற்றவாளிகள் தொடர்பான BOLO (Be On The Lookout) திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட பட்டியலில், கியூபெக்கைச் சேர்ந்த அதிகம் தேடப்படும் சந்தேகநபர்களில் நான்காவது இடத்தில் அயூப் மொஹமட் இடம்பெற்றிருந்ததாக கியூபெக் மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்களே சந்தேகநபர் இருக்கும் இடத்தைக் கண்டறிய உதவியதாகவும் விசாரணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, வெவ்வேறு மாகாணங்களைச் சேர்ந்த பொலிஸ் பிரிவுகளுக்கு இடையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு ஓர் உதாரணம் என பொலிஸ் அதிகாரி ஜெனிபர் நோயல் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் நிலைக் கொலைக் குற்றச்சாட்டு
கியூபெக்கின் சலாபெரி-டி-வலேஃபீல்ட் (Salaberry-de-Valleyfield) பகுதியில் கடந்த செப்டெம்பர் 4ஆம் திகதி ஜோர்டன் காக்னே (Jordan Gagné) என்பவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக அயூப் மொஹமட் மீது இரண்டாம் நிலைக் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக, புதன்கிழமை காணொளி ஊடாக கியூபெக்கின் வலேஃபீல்ட் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


