தமிழகத் திரையுலகின் இரு துருவங்களான விஜய் மற்றும் அஜித் குமார் ஆகியோரின் படங்கள் மீண்டும் ஒரே நாளில் திரையரங்குகளில் மோதவுள்ளன. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த ‘மங்காத்தா’ திரைப்படம் வரும் ஜனவரி 23-ஆம் தேதி மீண்டும் வெளியாகிறது. இந்நிலையில், பொங்கல் அன்று வெளியாக வேண்டிய விஜய்யின் ‘தெறி’ திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டு, தற்போது அதே ஜனவரி 23-ஆம் தேதியே வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீடு தணிக்கை குழு சிக்கல்களால் தாமதமாகி வரும் சூழலில், அவரது முந்தைய வெற்றிப் படமான ‘தெறி’யை மீண்டும் திரையிட வி கிரியேஷன்ஸ் நிறுவனம் திட்டமிட்டது. இது குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது சமூக வலைதளப் பக்கத்தில், “பிற புதிய படங்களின் வெளியீட்டு நலன் கருதி, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ‘தெறி’ படத்தின் மறுவெளியீடு ஜனவரி 23-க்கு மாற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சினிமாவில் விஜய் மற்றும் அஜித் படங்களுக்கு இடையிலான போட்டி என்பது 1996-ல் ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ மற்றும் ‘வான்மதி’ படங்களின் போதே தொடங்கியது. கடைசியாக 2023 பொங்கல் பண்டிகையின் போது ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ ஆகிய படங்கள் நேருக்கு நேர் மோதின. தற்போது புதிய படங்கள் இல்லாவிட்டாலும், ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பழைய பிளாக்பஸ்டர் படங்கள் மீண்டும் மோதுவது திரையரங்குகளில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் 2016-ல் வெளியான ‘தெறி’, தனது மகளுக்காக வன்முறையைத் துறந்து அமைதியாக வாழும் ஒரு முன்னாள் காவல் அதிகாரியின் கதையை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் திரைப்படமாகும். இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பேபி நைனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த மோதலை முன்னிட்டு நாளை ‘தெறி’ படத்தின் புதிய டிரைலர் வெளியாகவுள்ள நிலையில், ‘மங்காத்தா’ குழுவும் ஏற்கனவே ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


