Wednesday, July 22, 2026
spot_img
HomeUncategorizedடெல்லி பேட்மிண்டன் மைதானத்தில் பறவை எச்சம்: வீராங்கனை கடும் அதிருப்தி

டெல்லி பேட்மிண்டன் மைதானத்தில் பறவை எச்சம்: வீராங்கனை கடும் அதிருப்தி

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஓபன் 750 (India Open 2026) பேட்மிண்டன் தொடர், விளையாட்டைத் தாண்டி சுகாதாரச் சீர்கேடுகளால் சர்வதேச அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை மியா பிளிச்ஃபெல்ட் (Mia Blichfeldt), மைதானத்தின் தரம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரமாரியான புகார்களைப் பகிர்ந்துள்ளார்.

மைதானத்தின் தரைப்பகுதியில் பறவைகளின் எச்சம் கிடப்பது, அரங்குக்குள் நிலவும் அடர் பனிமூட்டம் மற்றும் சுகாதாரமற்ற சூழல் ஆகியவற்றைப் புகைப்படங்களாகப் பகிர்ந்துள்ள மியா, “இங்கே உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவது சாத்தியமே இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

“கடந்த சில நாட்கள் இந்தியாவில் எனக்கு மிகவும் சவாலாக இருந்தன. ஒரு உலகத் தரம் வாய்ந்த (Super 750) தொடரில் இத்தகைய தொழில்முறையற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத சூழல் நிலவுவது வருத்தமளிக்கிறது. வீரர்கள் அனைவரும் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்,” என மியா பிளிச்ஃபெல்ட் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தொடர் ஐஜி (IG) உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இது ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கான ஒரு முன்னோட்ட நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்த வாரம் முழுவதும் மைதானத்திற்குள் குரங்குகள் நுழைந்தது, மைதானத்தின் மேற்கூரையில் இருந்து விழுந்த பறவை எச்சத்தால் இந்திய வீரர் எச்.எஸ். பிரணாய் பங்குபெற்ற போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது எனப் பல அசம்பாவிதங்கள் அரங்கேறின.

டெல்லியின் அதீத காற்று மாசுபாடு காரணமாக டென்மார்க் வீரர் ஆண்டர்ஸ் ஆன்டன்சன் இத்தொடரில் இருந்து விலகியதும் குறிப்பிடத்தக்கது.

விமர்சனங்கள் வலுத்த நிலையில், சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு (BWF) மற்றும் இந்திய பேட்மிண்டன் சங்கம் (BAI) இணைந்து விளக்கமளித்துள்ளன.

மைதானத்தின் தூய்மை மற்றும் விலங்குகளைக் கட்டுப்படுத்துவதில் உள்ள குறைகளை ஒப்புக்கொண்ட BWF, அவற்றைச் சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் நடைபெறும் முக்கியத் தொடருக்குள் அனைத்து வசதிகளும் உலகத் தரத்திற்கு உயர்த்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments