Home இலங்கை செய்திகள் இலங்கைத் தேர்தல்களுக்கு பயன்படுத்தப்படவுள்ள ”உயிர்த்த ஞாயிறு” தாக்குதல்

இலங்கைத் தேர்தல்களுக்கு பயன்படுத்தப்படவுள்ள ”உயிர்த்த ஞாயிறு” தாக்குதல்

by admin

”பாராளுமன்றத்தில் 6 தடவைகளாக 14 நாட்களாக நடத்தப்பட்ட விவாதங்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 கோடி ரூபா வீதம் 21 கோடி ரூபா மக்களின் பணம் வீணடிக்கப்பட்டதேயன்றி விவாதங்களில் உருப்படியான எந்தவொரு தகவல்களையோ நகர்வுகளையோ, முன்னேற்றங்களையோ, முடிவுளையோ காணக் கிடைக்கவில்லை.எதிர்வரும் தேர்தல்களை இலக்கு வைத்த ஒரு தேர்தல் பிரசார ஆரம்பமாகவே 3 நாட்கள் விவாதங்களும் அமைந்திருந்தன”

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ”உயிர்த்த ஞாயிறு” தினத்தில் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலிலுள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களில் முஸ்லிம் பயங்கரவாதிகளினால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு 45 வெளிநாட்டவர்கள் உட்பட 269 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிர் பலியெடுக்கப்பட்டதுடன் 500 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் படுகாயப்படுத்தப்பட்ட கொடூரம் நடந்து கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதியுடன் 5 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி ”உயிர்த்த ஞாயிறு”தினம் இலங்கையில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அதுமட்டுமன்றி 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ”உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள்” தொடர்பில் பாராளுமன்றத்தில் கடந்த 24,25,26 ஆம் திகதிகளில் தொடர்ந்து 3 தினங்கள் விவாதங்களும் இடம்பெற்றன. இவ்வாறு ”உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள்” தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடத்தப்படுவது இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் 5 தடவைகளாக 11 தினங்கள் விவாதங்கள் நடத்தப்பட்டுள்ள நிலையிலேயே 6 தடவையாக கடந்த 24,25,26 ஆம் திகதிகளிலும் விவாதங்கள் நடத்தப்பட்டன.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ”உயிர்த்த ஞாயிறு” தினத்தில் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலிலுள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களில் முஸ்லிம் பயங்கரவாதிகளினால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்று 5 வருடங்களை கடந்துள்ள போதும் அமெரிக்கா , அவுஸ்திரேலியா, ஸ்கொட்லான்ட் விசாரணைகள் உள்ளிட்ட இலங்கை அரசுகளின் விசாரணைகள் முச்சந்தியில் விழிபிதுங்கி நிற்பதுபோன்றே இந்த தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் 6 தடவைகளாக 14 நாட்களாக நடத்தப்பட்ட விவாதங்களும் உப்புச் சப்பில்லாமலே முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்தில் 6 தடவைகளாக 14 நாட்களாக நடத்தப்பட்ட விவாதங்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 கோடி ரூபா வீதம் 21 கோடி ரூபா மக்களின் பணம் வீணடிக்கப்பட்டதேயன்றி விவாதங்களில் உருப்படியான எந்தவொரு தகவல்களையோ நகர்வுகளையோ, முன்னேற்றங்களையோ, முடிவுளையோ காணக் கிடைக்கவில்லை.எதிர்வரும் தேர்தல்களை இலக்கு வைத்த ஒரு தேர்தல் பிரசார ஆரம்பமாகவே கடந்த 3 நாட்கள் விவாதங்களும் அமைந்திருந்தன. அரசுக்கு எதிர்க்கட்சியும் எதிர்கட்சிக்கு அரசும் சேறுகளை பூசிக்கொண்டதுடன் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை ஒருவருக்கொருவர் சுமத்திக் கொண்டனர் .

உயிர்த்த ஞாயிறு கொடூர தாக்குதல்கள் நடைபெறப்போகின்றனவென 2019 ஏப்ரல் 4ஆம் திகதிக்கும் 9 ஆம் திகதிக்கும் இடையில் துல்லியமான உளவுத் தகவல்கள் இலங்கை புலனாய்வுத்துறைக்கு கிடைத்துள்ள போதும் அதனை வெளிப்படுத்தாது அரசியல்வாதிகளை மட்டும் பாதுகாக்கும் அறிவித்தல்களை விடுத்து விட்டு புலனாய்வுத்துறை மௌனம் காத்த அதேவேளை , தமக்கு விடுக்கப்பட்ட தாக்குதல் அபாயம் குறித்த எச்சரிக்கையை பகிரங்கப்படுத்தாது தமது பாதுகாப்பை மட்டும் உறுதிப்படுத்திக்கொண்டதுடன் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ அரசியல் வாதிகள் உட்பட எந்தவொரு அரசியல் வாதியும் தேவாலயங்களுக்கு கூட செல்லாது தமதும் தமது நெருங்கிய உறவினர்களினதும் உயிர்களை மட்டும் பாதுகாத்துக்கொண்டு அப்பாவி மக்களுக்கும் இலங்கை அரசையும் பாதுகாப்புத்தரப்பினரையும் நம்பி வந்த வெளிநாட்டவர்களுக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்ததைப்போன்றே தாக்குதல் நடந்து 5 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும் அதே நம்பிக்கைத் துரோகங்கள் தொடர்கின்றன.

சம்பவம் ஒன்று நடந்தால் அந்தப்பழியை ,குற்றச்சாட்டை அப்போது பிரதமராக விருந்த ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு மீது போடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரான அப்போதைய ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேனாவும் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன மீது போடுவதற்கு பிரதமர் ரணிலும் ஜனாதிபதி,பிரதமர் தலைகள் மீது போடுவதற்கு பொதுஜன பெரமுனவின் அப்போதைய எதிர்க் கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ஸவும் அரசியல் இலாபங்களுக்காக காத்திருந்ததாலேயே இந்த ”உயிர்த்த ஞாயிறு ”தின தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் தங்கு தடையின்றி நடத்தப்பட்டன. எவருமே மக்களைப்பற்றி சிந்திக்கவில்லை. ஆகவே தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளின் நோக்கமும் அதனை தடுக்காது விட்ட அரசியல்வாதிகளின் நோக்கமும் ஒன்றாகவே இருந்தது.

அதே போன்றே தாக்குதல் நடந்து 5 வருடங்கள் கடந்தும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் பழியை ,குற்றச்சாட்டை அப்போது பிரதமராக விருந்த ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க மீது போடுவதற்கு ஒரு தரப்பும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரான அப்போதைய ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன மீது போடுவதற்கு இன்னொரு தரப்பும் மைத்திரிபால சிறிசேன ,ரணில் மீது போடுவதற்கு இன்னொரு தரப்பும் ராஜபக்ஸக்கள் மீது போடுவதற்கு இன்னொரு தரப்புமென குண்டுத்தாக்குதல் குற்றச்சாட்டை சங்கீதக் கதிரையாக்கி வருவதனை தொடர்வதனையே கடந்த 3 நாட்கள் விவாதங்களும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி நின்றன.

முஸ்லிம் பயங்கரவாதிகளின் இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நாட்டையும் மக்களையும் அதலபாதாளத்துக்குள் தள்ளிய நிலையில் ஏற்கனவே அந்தப் பாதாளத்துக்குள் விழுந்துகிடந்த அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் தமது அசுத்தங்களை மறைத்துக்கொண்டு மேலெழுந்து வருவதற்கு இக்கொடூர தாக்குதல்களை தமக்கான ஒட்சிசனாகப் பயன்படுத்தி ஒரு தரப்பினர் ஆட்சியைப் பிடித்தனர் .ஆட்சியிலிருந்தவர்கள் எதிர்கட்சியாகினர். இன்று வேறு ஒரு வகையிலான ஆட்சி இடம்பெறுகின்றபோதும் தற்போது வரை ஆட்சியிலிருப்பவர்களும் எதிர்க்கட்சிகளும் இந்த உயிர்த்த ஞாயிறு தின கொடூரத்தை தமக்கான அரசியல் பிரசார ஆயுதமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது கூட உயிர்த்த ஞாயிறு தாக்குதலை எதிர்வரும் தேர்தல் பிரசாரங்களுக்கான ஆயுதமாகவே தென்னிலங்கை அரசியல் கட்சிகள் பயன்படுத்தப்போகின்றன என்பதற்கு இந்த பாராளுமன்ற விவாதமே கட்டியம் கூறி நிற்கின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில் அரசியல் ரீதியிலும் ஆட்சி ரீதியிலும் பல நெருக்கடிகள் உருவாகியிருப்பதைப்போலவே மக்கள் மத்தியிலும் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்து வாழ்க்கைச் சுமையைத் தாங்க முடியாத ஒரு பரிதாப நிலையே காணப்படுகின் றது. ஆனால் இவை”ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரிகள் யார்” என்ற கோஷத்தினால் கடந்த 5 வருடங்களாக மூடி மறைக்கப்பட்டு வருகின்றன. இனியும் மூடி மறக்கப்படவே போகின்றன சூத்திரதாரிக கண்டுபிடிக்கப்பட்டால் தென்னிலங்கை அரசியல் கட்சிகளுக்கு புதிய பிரசார ஆயுதங்களை தேட வேண்டியேற்படும் என்பதனால் இந்த தாக்குதல் பிரசார ஆயுதத்தையே அவர்கள் தொடர்ந்தும் பயன்படுத்தவுள்ளனர்.

”உயிர்த்த ஞாயிறு” தின தற்கொலைக்கு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை முழு நாட்டினாலும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டதுடன் அதில் பல விடயங்கள் அம்பலமாகும் எனவும் கணிக்கப்பட்டிருந்தது. எனினும் அறிக்கை வெளிவந்தவுடன் அதனை பகிரங்க படுத்த அரச தரப்பு பின்னடித்தது. இதன்மூலம் அறிக்கை மீதான எதிர் பார்ப்பு மேலும் அதிகரித்ததுடன் அந்த அறிக்கையை நாட்டுக்கு பகிரங்கப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகளும் அழுத்தங்களும் வலுத்தன . அறிக்கை தனக்கு கையளிக்கப்பட்ட வேண்டுமென கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வீதியிலிறங்கி போராடுமளவுக்கும் நீதிகோரி சர்வதேசம் செல்வேன் என எச்சரிக்குமளவுக்கும் அரசு அந்த அறிக்கையை வைத்து படம் காட்டியது.

ஆனால் சில தாமதங்களின் பின்னர் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் பகிரங்கப்படுத்தப்பட்டபோதுதான் அது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் இவர்கள் தான் என்பதனை வெளிக்காட்டாத அறிக்கை என்பது வெளிப்பட்டு முழு நாடும் அதிர்ச்சியடைந்தது. அந்த அறிக்கையை வைத்தே பல மாதங்களை பரபரப்பாக்கி பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசும் எதிர்க்கட்சிகளும் காலத்தைக் கடத்தின.இடையிடையே கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் சூடான அறிக்கைகளை விட்டு பின்னர் அமைதியாகிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர் அவர் கோத்தபாய ராஜபக்ஸ அரசுடன் நடத்திய பேச்சுக்கள் , கொடுத்த மத ரீதியிலான அழுத்தங்களை அமைச்சர்கள் பாராளுமன்றத்திலேயே பகிரங்கப்படுத்தி கர்தினாலை மறைமுகமாக மிரட்டி அமைதியடைய வைத்தனர் .

பிரதான சூத்திரதாரிகளை கைதுசெய்யாமை , தாக்குதலுடன் தொடர்புபட்ட சிலரை விசாரணை அறிக்கையில் உள்வாங்காமை, சந்தேக நபர்களை வெளிநாடு தப்பி செல்ல அனுமதித்தமை , விசாரணைகளில் இழுத்தடிப்புக்கள், என அரசு காலத்தைக் கடத்துவதையே இலக்காகக் கொண்டிருந்தது. ”உயிர்த்த ஞாயிறு” தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் பெரும் பகுதியினர் தமிழ் கிறிஸ்தவர்கள் என்பதினாலும் பாதிப்பை ஏற்படுத்தியவர்களின் தரப்பான முஸ்லிம்களும் சிறுபான்மையினத்தவர்கள் என்பதினாலுமே அரசு நீதியை வழங்காது கடந்த 5 வருடங்களாக ”உயிர்த்த ஞாயிறு” தின தற்கொலைக் குண்டுத் தாக்குதலை வைத்து அரசியல் செய்தது.

இனி இந்த வருடம் ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்கள் வர விருப்பதால் ”உயிர்த்த ஞாயிறு”தாக்குதல் மீண்டும் உயர்ப்பிக்கப்படுகின்றது அதில் முதல் உயிர்ப்பிப்பாகவே தாக்குதல் நடந்தபோது ஜனாதிபதியாக இருந்தவரும் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 10 கோடி ரூபா வரையில் நஷ்டஈடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டவருமான மைத்திரி பால சிறிசேன ”உயிர்த்த ஞாயிறு” தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரியை தனக்கு தெரியுமென 5 வருடங்களுக்கு பின்னர் கூறி தேர்தல் குண்டை வெடிக்க வைத்தார் அதனால் இப்போது நாட்டில் மீண்டும் அதிர்வுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. விவாதங்கள் சூடு பிடிக்காத தொடங்கியுள்ளன. தேர்தல்கள் நடந்து முடியும் வரை மீண்டும் ”உயிர்த்த ஞாயிறு” தின தற்கொலைக்குண்டுத்தாக்குதல்கள் பெரும் பிரசார ஆயுதமாக வெடிக்க வைக்கப்பட்டுக்கொண்ட இருக்கும்

”உயிர்த்த ஞாயிறு ”தின தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் பயங்கரவாதிகளின் நோக்கமும் அரசியல்வாதிகளின் நோக்கமும் ஒன்றாகவே இருந்துள்ளதனால் தான் தாக்குதல் நடந்து 5 வருடங்களாகி விட்ட நிலையிலும் தாக்குதல் சூத்திரதாரிகளும் சிக்கவில்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை. ஆனால் அந்த தாக்குதலை பயன்படுத்தி ஆட்சி மாற்றங்களும் தேர்தல் வெற்றி, தோல்விகளும் தீர்மானிக்கப்படுவது மட்டும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன .

பாராளுமன்றத்தில் 6 தடவைகளாக 14 நாட்களாக நடத்தப்பட்ட விவாதங்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 கோடி ரூபா வீதம் 21 கோடி ரூபா மக்களின் பணம் வீணடிக்கப்பட்ட நிலையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தப்பணத்தை நிவாரணமாக பங்கிட்டு வழங்கியிருந்தால் கூட அது அந்த மக்களின் மனங்களை ஓரளவுக்காவது ஆற்றுப்படுத்தியிருக்கும்.

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy