Home இலங்கை செய்திகள் ஜனாதிபதி வேட்பாளரை சுதந்திரக் கட்சி களமிறக்குவது கேலிக்கூத்தானது – சந்திரிக்கா

ஜனாதிபதி வேட்பாளரை சுதந்திரக் கட்சி களமிறக்குவது கேலிக்கூத்தானது – சந்திரிக்கா

by admin

நாட்டை இல்லாதொழித்த மைத்திரிபால சிறிசேன சுதந்திர கட்சியையும் இல்லாதொழித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சி வேட்பாளரை களமிறக்குவது கேலிக்கூத்தானது.

கட்சியை மறுசீரமைப்பதற்கு காலம் தேவை. தலைவர் பதவியை பெற போவதில்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஆலோசனைகள் மாத்திரமே வழங்குவேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

எனது அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் ஒருசில ஊடகங்கள் திட்டமிட்ட வகையில் பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளன.

அதேபோல் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதற்கு நான் முயற்சிப்பதாகவும், சுதந்திர கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அரசியல் களத்தில் அடிப்படையற்ற கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன.

சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் 40 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த சுதந்திர கட்சி அரசியலில் பூச்சியமளவுக்கு பலவீனமடைந்தது.

நாட்டை இல்லாதொழித்த மைத்திரிபால சிறிசேன சுதந்திர கட்சியை ஆறு பகுதிகளாக பிளவுப்படுத்தியுள்ளார். ஆகவே கட்சியை ஆரம்பத்தில் இருந்து சீரமைக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியும் பலவீனமடைந்துள்ளது.கட்சியி;ன் 90 சதவீதமான உறுப்பினர்கள் பிறிதொரு பகுதியில் உள்ளார்கள். 10 சதவீதமான தரப்பினர் மாத்திரமே கட்சிக்குள் உள்ளார்கள். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய நிலைமையை மக்கள் விடுதலை முன்னணி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து அரசியலில் இருந்து விலகினேன். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை நான் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கினேன். ஆனால் அவர் என்னை பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்கினார். ஆண்மகன் ஒருவன் கூட எதிர்கொள்ள முடியாத இன்னல்களை எதிர்கொண்டேன்.

2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் ஆட்சிமாற்றத்தை எதிர்பார்த்தார்கள். மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோரிடம் குறிப்பிட்டேன். எனது கருத்துக்கு மதிப்பளிக்காமல் என்னை கட்சியின் பதவியில் இருந்து மைத்திரி நீக்கினார்.இறுதியில் நான் குறிப்பிட்டது நிறைவேறியது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய நிலைமை கவலைக்குரியது. நெருக்கடியான சூழலில் கட்சியை பொறுப்பேற்குமாறு பலர் எனக்கு அழைப்பு விடுத்தார்கள். நான் அதனை ஏற்கவில்லை. இருப்பினும் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் அழைப்புக்கு அமைய கட்சியின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்னிலையாகியுள்ளேன்.

சுதந்திர கட்சியின் இன்றைய அவல நிலைக்கு மைத்திரிபால சிறிசேனவும்,மஹிந்த ராஜபக்ஷவும் பொறுப்புக் கூற வேண்டும். இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் வேட்பாளரை களமிறக்குவது ஏனெனில் கட்சியின் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளரை களமிறக்குவது கேலிக்கூத்தானது.

சுதந்திர கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க எனது நண்பர் இருப்பினும் கொள்கை ரீதியில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஊழல்வாதிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தவுடன் அவர் சுய கொள்கைகளையும் மறந்து விட்டு 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் போராட்டம் ஒன்று தோற்றம் பெற்றது என்பதை மறந்து விட்டு செயற்படுகிறார்.

கட்சியின் யாப்புக்கு அமைய சுதந்திர கட்சியின் பதவி நிலைகளில் தற்காலிக மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெகுவிரைவில் நிலையான மாற்றம் ஏற்படுத்தப்படும்.கட்சியின் தலைவர் பதவியை நான் பெற்றுக் கொள்ள போவதில்லை.தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு மாத்திரம் முன்னிலையாகியுள்ளேன் என்றார்.

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy