Home இந்தியா செய்திகள் புதுச்சேரியில் 2 வீடுகளில் பறக்கும் படை சோதனை; ரூ.4.9 கோடி பறிமுதல்

புதுச்சேரியில் 2 வீடுகளில் பறக்கும் படை சோதனை; ரூ.4.9 கோடி பறிமுதல்

by admin

புதுச்சேரியில் இரு வீடுகளில் இருந்து ரூ.4.9 கோடியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். வருமான வரித் துறையினர் விசாரணை நடந்து வருகிறது என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க புதுவையில் 72 பறக்கும் படை அமைக்கப்பட்டு சோதனை செய்து வருகின்றனர். மாநில எல்லைகளிலும், வாகனங்களிலும் சோதனை செய்து வருகின்றனர். புதுச்சேரியில் பாஜக கட்சியினர் வாக்குக்கு ரூ.500-ம், காங்கிரஸ் கட்சியினர் வாக்குக்கு ரூ.200-ம் தருவதாக அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், தேர்தல் துறையின் பறக்கும் படையினர் கடந்த இரண்டு நாட்களாக சோதனை செய்து வருகின்றனர்.

புதன்கிழமையன்று இரவு வரை ரூ.64 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பணம் வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்றுமுன் தினம் இரவு வரை மொத்தம் ரூ.1 கோடியே 39 லட்சத்து 13 ஆயிரத்து 860 பறிமுதல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி ரூ.8 லட்சத்து 11 ஆயிரத்து 154 மதிப்பிலான பரிசு பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர். நேற்று காலை வரை 5 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மதியம் 100 அடி சாலை அருகேயுள்ள ஜான்சி நகரில் ஒரு பைனான்சியர் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் பறக்கும் படைக்கு கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். பல கோடி பறிமுதல் செய்தனர். விசாரணையில் பைனான்சியர் ஒருவர் வீடு என்பது தெரிந்தது.

இதுபற்றி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும் ஆட்சியருமான குலோத்துங்கனிடம் கேட்டதற்கு, “புதுச்சேரியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யஷ்வந்தையாவுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து யஷ்வந்தையாவும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரகுமரனும் வீட்டில் பணம் இருப்பதாக வந்த தகவல் படி ஜான்சி நகரில் சோதனை செய்தனர். அங்கு ரூ.3.68 கோடி கிடைத்தது. உடனடியாக வருமான வரித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இரண்டாவதாக, நெல்லித்தோப்பில் சோதனை நடத்தியபோது ரூ.40.46 லட்சம் கிடைத்தது. மொத்தமாக, ஒரே நாளில் ரூ.4.9 கோடி பறிமுதலாகியுள்ளது. இரு தரப்பிலும் வருவான வரித் துறையினர் சோதனை செய்தனர். கட்சி பின்னணி தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மேலும், தகவல் தந்தால் விசாரணையில் பாதிப்பில் ஏற்படும். விரைவில் முழு தகவல் தருகிறோம்” என்றார்.

 

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy