Home இந்தியா செய்திகள் பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை தூக்கமில்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை தூக்கமில்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

by admin

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது: ஏப்ரல் 19-ந் தேதி நீங்கள் போடுகிற ஓட்டு தான் நாம் மோடிக்கு வைக்கிற வேட்டு. இந்த முறை பா.ஜ.க.வை விரட்டி அடித்து விட்டு, இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது.

அதற்கு ஆரம்ப புள்ளியாக தமிழ்நாடு இருக்கப்போகிறது. 39-க்கு 39 வெற்றி நாம் தான் வெற்றி பெற போகிறோம். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கியாஸ் சிலிண்டர் விலை ரூ.400-க்கு விற்பனையானது. தற்போது கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் பிரதமர் மோடி தான். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், கியாஸ் சிலிண்டர் ரூ.500-க்கு கொடுக்கப்படும். பெட்ரோல் லிட்டர் ரூ.75-க்கும், டீசல் லிட்டர் ரூ.65-க்கும் கொடுக்கப்படும் என வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம்.

அதுமட்டுமின்றி கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். செம்மொழி பூங்கா பணிகள் விரைந்து முடிக்கப்படும், கலைஞர் நூலகம் கட்டி முடிக்கப்படும். நகை தொழில் புத்துயிர் பெறுவதற்கு புதிய சிட்கோ பூங்கா அமைக்கப்படும், ஜி.டி.நாயுடு பெயரில் அறிவியல் ஆய்வு மையம் அமைத்து தரப்படும். சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி காட்டுவோம். இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் நமது முதலமைச்சரால் கொண்டு வரப்பட்டது தான் காலை உணவு திட்டம். தரமான காலை உணவு கொடுத்து, தரமான கல்வியை கொடுப்பது தான் நமது திராவிட மாடல் அரசு.

இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு நாளும் 18 லட்சம் குழந்தைகள் பயன் பெறுகின்றனர். இந்த திட்டத்தை கர்நாடகாவிலும் செயல்படுத்தியுள்ளனர். மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக செயல்படுவது தான் திராவிட மாடல் அரசு. கோவை மாவட்டத்தில் மட்டும் தினந்தோறும் 80 ஆயிரம் குழந்தைகள் காலை உணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர். இதேபோல் மகளிர் உரிமைத்தொகை திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15-ந் தேதி ஒரு கோடியே 18 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இன்னும் 5 மாதங்களில் அனைத்து பணிகளும் சரி செய்யப்பட்டு, விடுபட்ட அனைத்து தகுதியுள்ள இல்லத்தரசிகளுக்கும் மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கொடுக்கப்படும். தி.மு.க. தலைவர், தி.மு.க.வினருக்கு தூக்கம் போய்விட்டது என்று பிரதமர் மோடி சொல்லி வருகிறார். ஆமாம் எங்களுக்கு தூக்கம் போய்விட்டது. பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரையில் எங்களுக்கு தூக்கம் இல்லை. மாண்மிகு சுயமரியாதைக்காரர்களுக்கும், இரக்கமற்ற சர்வாதிகாரிகளுக்கும் நடக்கும் போர் தான் இந்த தேர்தல். இதில் இந்தியா கூட்டணி ஜெயிக்க தமிழகம் ஆரம்ப புள்ளியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy