Home இந்தியா செய்திகள் “தமிழ்நாட்டில் அண்ணாமலையால் பாஜக தோல்வி அடையும்” தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ தாக்கு

“தமிழ்நாட்டில் அண்ணாமலையால் பாஜக தோல்வி அடையும்” தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ தாக்கு

by admin

நாகர்கோவில், ஒழுகினசேரியில் அமைந்துள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது . முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மக்களவை வேட்பாளர் பசிலியான் நசரேத், விளவங்கோடு வேட்பாளர் ராணி, முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ நிருபர்களிடம் கூறியதாவது :

2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுக இருக்காது என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். அவரது பேச்சு அனைத்தும் அரைவேக்காடுதனமாக இருக்கிறது. அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோர் அவரது கட்சியில் இணைய இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க பெருமை அண்ணாமலையை சேரும். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை எங்கு இருக்கிறார் என்பதே தெரியாத நிலை ஏற்படும்.

பாஜக தோல்விக்கு அண்ணாமலையே முக்கிய காரணமாக இருக்க போகிறார். தமிழ்நாட்டு மக்கள் பாரதிய ஜனதாவை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதை அண்ணாமலை புரிந்து இருக்கிறார். ஒரு தேசிய கட்சி மாநில கட்சிகளை அழித்து விடுவேன் என்று பேசி வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. அண்ணாமலை முதலில் தனது கையில் கட்டி இருந்த வாட்ச்சுக்கு முறையான பதில் சொல்ல முடியாதவர்.

இன்னும் தன்னை ஒரு போலீஸ் அதிகாரியாகவே நினைத்துக் கொண்டு உளவுத்துறையை கைது செய்வேன் என்று பேசுகிறார். அதிமுகவை அழித்து விடுவேன் என்று பேசுபவர்களின் நிலை என்ன ஆகும் என்பதை அண்ணாமலை வழியாக தெரிய வரும்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். கன்னியாகுமரி மாவட்டம் வழியாக தற்போதும் கனிமவள கடத்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது. எடை இயந்திரத்திற்கு டாரஸ் லாரிகளை கொண்டு வந்து அளவீடு செய்கிறார்கள். உபரி மணல் டாரஸ் லாரிகளிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு மீண்டும் முறைகேடாக வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது எனவே இதை தடுக்க வேண்டும். .

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy