Home பொது செய்திகள் கூரியர் நிறுவனம் பெயரில் நூதன மோசடி: வீடியோ காலில் ரூ.15 லட்சத்தை இழந்த இளம்பெண்

கூரியர் நிறுவனம் பெயரில் நூதன மோசடி: வீடியோ காலில் ரூ.15 லட்சத்தை இழந்த இளம்பெண்

by admin

தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அதற்கு சான்றாக ஒரு சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. பெடக்ஸ் கூரியர் நிறுவனம் என்ற பெயரில் இந்த மோசடி நிகழ்ந்துள்ளது.

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 29 வயது பெண்ணுக்கு கடந்த 3 ம் தேதி, ஒரு சர்வதேச அழைப்பு வந்துள்ளது. தாய்லாந்தில் இருந்து பெடக்ஸ் கூரியர் இல் 140 கிராம் போதைப்பொருள் அந்த பெண்ணுக்கு அனுப்பப்பட்டதாக மோசடி கும்பல் தெரிவித்தனர். அப்போது, மத்தியப் புலனாய்வுத் துறையின் (சிபிஐ) மூத்த அதிகாரி எனக் கூறிக்கொண்டு மோசடி கும்பலில் இருந்த மற்றொரு நபர் போனை வாங்கி, அப்பெண் ஆள் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்குகளில் ஈடுபட்டதாகக் கூறி மிரட்டியுள்ளார்.

பின்னர், அந்த மோசடி கும்பல், இந்த விஷயங்களை பற்றி யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று அந்த பெண்ணை எச்சரித்துள்ளனர். மேலும் இந்த வழக்குகளில் இருந்து வெளியேறுவதற்கான நடைமுறையைப் பின்பற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். உடனே அந்த பெண்ணும் அவர்கள் சொல்வதற்கு இணங்க நடந்துள்ளார். அதற்காக ஸ்கைப் டவுன்லோட் செய்யும்படி வலியுறுத்தியுள்ளனர். இதனால் அந்த பெண் தொடர்ந்து 36 மணி நேரம் வீடியோ அழைப்பில் இருந்துள்ளார். போதைப்பொருள் சோதனை என்ற பெயரில், அந்த பெண்ணின் ஆடைகளை கழற்றுமாறு வற்புறுத்தியுள்ளனர். அதன் பிறகு, அவரது நிர்வாண வீடியோ பதிவு செய்யப்பட்டு மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வீடியோ கிளிப்பை டார்க் வெப்பில் விற்கப் போவதாக அந்த கும்பல் மிரட்டியுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணிடம் இருந்து ரூ.15 லட்சம் பணம் அனுப்பும்படி மிரட்டியுள்ளனர். இதனால் அந்த பெண் அவர்கள் கூறிய தொகையை அனுப்பியுள்ளார்.

அதன் பிறகும் , மோசடி செய்தவர்கள் கூடுதலாக ரூ.10 லட்சம் கேட்டு, அவரது நிர்வாண வீடியோக்களை டார்க் வெப்பில் விற்கப் போவதாக மிரட்டியுள்ளனர். பின்னர் அந்த பெண் அழைப்பை துண்டித்துவிட்டு காவல்துறையை தொடர்பு கொண்டுள்ளார். இது குறித்து புகார் அளித்தார். தற்போது தகவல் தொழில்நுட்ப சட்டம், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் மோசடி தொடர்பான சட்டங்களின் கீழ், அந்த கும்பலைப் பிடிக்க போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் ஸ்கேம்கள் அதிகரித்துள்ளதற்கு இந்த சம்பவம் மற்றுமொரு எடுத்துக்காட்டு. இதற்கிடையில், கூரியர் சேவைகள் தொடர்பான தனிப்பட்ட தகவல்களை நிறுவனம் ஒருபோதும் கேட்பதில்லை என்று பெடக்ஸ் நிறுவனம் தெளிவுபடுத்தியது. பெடக்ஸ் கூரியர் நிறுவனத்திடம் இருந்து தனிப்பட்ட தகவல்களை யாராவது உங்களிடம் கேட்டால், வாடிக்கையாளர்கள் போலீசில் புகார் செய்யுமாறு நிறுவனம் அறிவுறுத்தியது.

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy