கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதையடுத்து கனடா மீதான வரியை அதிரடியாக அதிகரித்தார். உள்நாட்டு அரசியல் பிரச்சினை, டிரம்ப் வரி விதிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் லிபரல் கட்சியை சேர்ந்த ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவர் கடந்த மாதம் 14-ந் தேதி கனடாவின் 24-வது பிரதமராக பதவியேற்றார்.
கனடா நாடாளுமன்றத்தின் பதவிகாலம் வரும் அக்டோபர் மாதம் வரை இருக்கும் நிலையில் பிரதமர் மார்க் கார்னி நாடாளுமன்றத்தை கலைத்தார். மேலும், நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் மார்க் கார்னி அழைப்பு விடுத்தார்.
அதன்படி, ஏப்ரல் 28ம் தேதி (இன்று) கனடா நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக மார்க் கார்னி களமிறங்கினார். கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பெர்ரி பொய்லிவ் பிரதமர் வேட்பாளாரக களமிறங்கினார். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 8.30 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 172 இடங்களில் வெற்றிபெற வேண்டும். பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும். அந்த கட்சியின் உறுப்பினர்கள் சேர்ந்து பிரதமரை தேர்ந்தெடுக்க உள்ளனர். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் இன்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.