Monday, April 28, 2025
spot_img
Homeஇலங்கை செய்திகள்நிபந்தனையுடன் எதற்காக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது? - ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி

நிபந்தனையுடன் எதற்காக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது? – ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் நட்பு ரீதியான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது எனில், அதனை வெளிப்படுத்துவற்கு எதற்காக அனுமதிக்காக காத்திருக்க வேண்டும். அவ்வாறானதொரு நிபந்தனையுடன் ஏன் அரசாங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது? மே 6க்கு முன்னர் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் வெளிப்படுத்தப்படா விட்டால் அரசாங்கம் தாய் நாட்டின் இறையான்மையை காட்டிக் கொடுத்துள்ளதாகவே கருதப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் நன்மை கிடைக்கும் வகையிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது பொறுத்தமானது. உலகின் பாரிய பொருளாதார வல்லரசான இந்தியா கடந்த காலங்களில் இலங்கையின் எதிர்காலம் குறித்து அழுத்தம் பிரயோகித்துள்ள, எதிர்காலத்திலும் பிரயோகிக்கக் கூடிய நட்பு நாடாகும். எனவே இந்தியாவுடன் நாம் எமது தொடர்புகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

எவ்வாறிருப்பினும் இந்திய பிரதமர் மோடியின் விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட 7 ஒப்பந்தங்களில் ஒன்றையேனும் அரசாங்கம் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கவில்லை. வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் இணையதளத்திலும் பதிவேற்றப்படவில்லை. ஊடகங்களுக்கும் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் நாம் தொடர்ந்தும் கேட்டுக் கொண்டிருக்கும் நிலைமையிலும் அரசாங்கம் அவற்றை மறைத்துக் கொண்டிருக்கிறது.

தகவல் அறியும் சட்டத்தின் ஊடாகக் கோருமாறு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் கூறுகின்றார். இந்தியாவின் இணக்கப்பாடு இன்றி ஒப்பந்தங்கள் குறித்து தெரிவிக்க முடியாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகின்றார். ஒப்பந்தங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கே இவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம் ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஒப்பந்தங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறிக் கொண்டிருக்கின்றார்.

உண்மையில் அவருக்கே அவை தொடர்பில் எதுவும் தெரியாது. மரணித்து உயிர்த்தெழுந்ததைப் போன்று பேசிக் கொண்டிருக்கின்றார். நட்பு ரீதியான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருந்தால் எதற்காக இந்தியாவிடம் அனுமதி பெற வேண்டும்? அவ்வாறான நிபந்தனையுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கின்றது என்றால் அது தாய்நாட்டை காட்டிக் கொடுத்தல் இல்லையா? ஏன் இவ்வாறான நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியது என்பதை நளிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்த வேண்டும்.

உதய கம்மன்பில இரு ஒப்பந்தங்களை வெளிப்படுத்தியிருக்கின்றார். ஆனால் இதன் உண்மை தன்மை குறித்து எமக்கு தெரியாது. மே 6ஆம் திகதி தேர்தலுக்கு முன்னர் இந்த ஒப்பந்தங்கள் குறித்த உண்மைகள் வெளிப்படுத்தப்படவில்லை என்றால் இந்த அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளது என்பது உறுதிப்படுத்தப்படும். தேர்தலில் வாக்களிக்க முன்னர் மக்கள் இது தொடர்பில் சிந்திக்க வேண்டும். ஒப்பந்தங்களை வெளிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டின் இறையான்மை காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்வோம் என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments